இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: 3 விசைப்படகுகளும் பறிமுதல்

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை சிறைபிடித்ததோடு, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 196 விசைபடகுகள், ஜெகதாபட்டினத்திலிருந்து 76 விசைபடகுகள் என மொத்தம் 272 விசை படகுகளில் நேற்றுமுன்தினம் அதிகாலை 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று அதிகாலை 1 மணி வரை மீன்பிடித்து விட்டு மீனவர்கள் அனைவரும் கரை திரும்பினர். அப்போது நெடுந்தீவு அருகே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வகுமார், மணிகண்டன், கோட்டைபட்டினத்தை சேர்ந்த கலந்தர் நைனாமுகமது ஆகிய 3 பேரின் விசைபடகை சுற்றி வளைத்தனர்.

பின்னர் படகு உரிமையாளரான செல்வகுமார் (41) மற்றும் விஜய பிரியன்(21), விஜய் பிரகாஷ்(16), காசிராஜா(68), சேகர்(60), மற்றொரு படகு உரிமையாளரான மணிகண்டன் (37) மற்றும் சுபாஷ் (30), ரஹ்மத்துல்லா(38), திருமுருகன்(27), இதே போல் கோட்டைபட்டினத்தை சேர்ந்த கலந்தர் நைனா முகம்மது படகில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(42), மணிகண்டன்(25), கார்த்திக்(23) ஜெயக்குமார்(53) ஆகிய 13 மீனவர்களை சிறைபிடித்ததோடு 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 26 நாளில் 74 பேர் கைது
தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 16 முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஏற்கனவே 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26 நாளில் மொத்தம் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 12 விசைபடகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெரி காஸ்ட்லி டீ!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேப்பாடியில் தமிழ்நாடு அரசின் உதவி மையம் திறப்பு!!