பரபரப்பான இலங்கை தேர்தல் முடிவு அதிபரானார் அனுர குமார திசநாயக: சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்‌சே மகன் படுதோல்வி

கொழும்பு: இலங்கையில் பரபரப்பாக நடந்த அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மார்க்சிஸ்ட் தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி அடைந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சஜித் பிரேமதாசா, ராஜபக்‌சே மகன் நமல் உள்ளிட்டோரும் தோல்வியை சந்தித்தனர். இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் அனுர குமார திசநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உட்பட 38 பேர் போட்டியிட்டனர். 1.7 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை. வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இலங்கை தேர்தலில், முதல் 3 விருப்பங்கள் அடிப்படையில் 3 வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். மக்களின் முதல் விருப்ப வாக்குகள் முதலில் எண்ணப்படும்.

இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஆனால், இம்முறை அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டதால் கடும் இழுபறி நிலவியது. அதிகபட்சமாக என்பிபி கட்சியின் திசநாயக 56.3 லட்சம் வாக்குகள் (42.31 சதவீதம்) பெற்றார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா 43.6 லட்சம் வாக்குகளுடன் (32.8%) 2ம் இடம் பெற்றார். ரணில் விக்ரமசிங்கே வெறும் 22.9 லட்சம் வாக்குகள் (17.27%) மட்டுமே பெற்று 3ம் இடத்தை பிடித்தார்.

தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.26 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார். யாருக்கும் 50 சதவீத பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நேற்று மதியம் தொடங்கியது. முதல் சுற்றில் முதல் 2 இடங்களுக்குள் இடம் பெறத் தவறியதால் ரணில் விக்ரமசிங்கே போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் 2 இடங்களை பிடித்த திசநாயக, பிரேமதாசா இருவரில் யாருக்கு 2ம் விருப்ப வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது என 2ம் சுற்று எண்ணிக்கையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் நீண்ட இழுபறிக்குப் பின் திசநாயக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய தலைவர் ரத்நாயக நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மார்க்சிஸ்ட் தலைவர் இலங்கை அதிபராவது இதுவே முதல் முறை. இன்று நடக்கும் எளிமையான பதவியேற்பு விழாவில் இலங்கையின் 9வது அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்க உள்ளார். திசாநாயக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவரது கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள திசநாயகவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* இந்தியாவா…சீனாவா?
திசநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சி அடிப்படையிலேயே இந்தியாவுக்கு எதிரான, அதே சமயம் சீன ஆதரவு கோட்பாட்டை கொண்ட கட்சியாகும். 1980களில் இலங்கையின் நலனுக்கான எதிரி இந்தியா என்று போராட்டங்களை நடத்திய ஜேவிபி, 1987ல் இந்தியா, இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது.

இதனால், திசநாயக அதிபரான பிறகு இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பாரா? சீனா பக்கம் சாய்வாரா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. அதே சமயம், இலங்கையின் பொருளாதாரமும் இன்னமும் மீளாத நிலையில் இருப்பதால் இப்போதைக்கு அவர் அண்டை நாடான இந்தியாவை பகைத்துக் கொள்ள மாட்டார் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* யார் இந்த திசநாயக?
55 வயதாகும் திசநாயக, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிமீ தொலைவில் அமைந்துள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்த இவர், கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார். 1987 மற்றும் 1989க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜேவிபி கட்சியின் அரசு எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார். மக்கள் பிரச்னைக்காக களத்தில் நின்று தீவிரமாக குரல் கொடுத்ததன் விளைவாக, 1995ம் ஆண்டு திசநாயக சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார்.

ஜேவிபியின் மத்திய செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் அரசியல் பீரோவில் உறுப்பினரானார். 2000ம் ஆண்டு திசநாயக முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். பின்னர் கட்சியின் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். திசநாயக, 2004ம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராணுவ நடவடிக்கையை ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 அதிபர் தேர்தலிலும் திசநாயக போட்டியிட்டார். அப்போது அவர் 4.18 லட்சம் வாக்குகள் அதாவது மொத்தம் பதிவானதில் 3.16 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு