இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் 13 பேரையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டை சேர்ந்த 13 மீனவர்கள் மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் நேற்று (11ம் தேதி) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடி படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவு துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்: பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக பஹத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி