தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம்: இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு சிபிஎம் வாழ்த்து

சென்னை: தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம் என இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட மாபெரும் மக்கள் போராட்டத்தின் விளைவாக, அரசியலில் முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு, மக்களின் கல்வி, சுகாதாரம் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் பல இடதுசாரி திட்டங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அனுர குமார திசநாயக்க தலைமையில் தேர்தல் களத்தை சந்தித்தது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு இடதுசாரி வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் மூலம் உலகை ஆட்டி படைத்து வரும் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து உழைப்பாளி மக்கள் அனுதினமும் போராடி வரும் சூழ்நிலையில் இலங்கையில் இடதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இம்மகத்தான முறையில் வெற்றிபெற்றுள்ள அனுர குமார திசநாயக்க அவர்களுக்கும், அவருக்கு வாக்களித்த இலங்கை வாக்காளப் பெருமக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இலங்கையின் இன்றைய சவால்களை எதிர்கொண்டு மக்கள் ஒற்றுமை, உழைக்கும் மக்களுக்கான நலன் காக்கும் நல்லாட்சியை நடத்திட அனுர குமார திசநாயக்க அரசு பாடுபடும் என்று நம்புகிறோம்.

அத்துடன் பறிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகள், இன, மொழி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிபடுத்தி இலங்கையில் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை நிலைநாட்டும் அரசாக அனுர குமார திசநாயக்க அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தில் தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிலை நீடிக்கும் சூழலில் தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம். இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக நிகழ்ந்துள்ள மாற்றம் இலங்கையில் உள்நாட்டு அரசியலில் அமைதி, முன்னேற்றம் ஏற்படுத்தும் எனவும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவு வலுப்பட வேண்டுமென்றும் தமிழக மக்களின் விருப்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிரொலிப்பதோடு, அனுர குமார திசநாயக்க அரசு வெற்றிப்பயணத்தை தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு