Thursday, September 12, 2024
Home » ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 76 (பகவத்கீதை உரை)

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 76 (பகவத்கீதை உரை)

by Nithya

அறிவை வளர்க்கும் கர்மயோகம்

`சிலசமயம் விளங்கச் சொல்ல வேண்டு மானால், விரிவாகச் சொல்ல வேண்டும். கேட்பவர் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும். சொல்லும்போதே, கேட்பவரின் முகபாவத்தை கவனித்து அவர் சரியாகப் புரிந்து கொள்கிறாரா, இல்லையா என்பதையும் அனுமானித்து, இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டும். துரதிருஷ்டவசமாக, இப்படி விரிவாகச் சொல்லும் பல கட்டங்களில் புரிதலைவிட குழப்பமே மேலோங்கி விடுகிறது. இதற்குக் காரணம், விளக்கிச் சொல்பவர் தம் கருத்தை வலியுறுத்துவதற்காக ஒரே விஷயத்தைப் பல வார்த்தைகளில் சொல்வதாலும் இருக்கலாம். அப்படிச் சொல்லும்போது சொல்பவர் தன் கருத்துகளில் முரண் படுவதுபோல கேட்பவருக்குத் தோன்றலாம்.

இதற்கும் ஒரு காரணம் உண்டு. விளக்கத்தின் நீளம் அதிகமாக ஆக, கேட்பவருக்கு அதன் ஆரம்பப் பகுதி மறந்து போயிருக்கக் கூடும். ஆனால், அர்ஜுனன் போர் நினைப்பினால் மனம் சோர்ந்து போனான் என்றாலும், பகவானின் விளக்கத்தை சோர்வில்லாமல் கேட்டான். அதனால்தான் அவனால் கேள்வி கேட்க முடிந்திருக்கிறது. ‘கொஞ்ச நேரம் முன்னால் அப்படி சொன்னீர்களே, இப்போது இப்படிச் சொல்கிறீர்களே?’ என்று அவனால் தன் குழப்பத்தை முன் வைக்க முடிந்திருக்கிறது.

அதற்காக கிருஷ்ணன் வருத்தப்படவில்லை. அர்ஜுனன் புரிந்து கொள்ளாதது பற்றி அவர் சலித்துக் கொள்ளவில்லை. அவன் மனம் முதிர்வடையவில்லை, அதனாலேயே தான் சொல்ல வந்ததை அவனால் முழுமையாக ஏற்க இயலவில்லை என்றுதான் கருதினார். அடுத்ததான ‘சந்நியாச யோகம்’ என்னும் ஐந்தாவது அத்தியாயத்திலும் அர்ஜுனன் தன் சந்தேகங்களைக் கேட்க, பகவானும் மேன்மேலும் விளக்கங்கள் கொடுக்கத் தயாராகிறார்.

ஸந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புனர்யோகம் ச சம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோரேகம் தன்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம் (5:1)

அர்ஜுனன் கேட்கிறான்; ‘‘கிருஷ்ணா, கர்மத்தைத் துறக்கவும் சொல்கிறாய், பிறகு அதைக் கையாளவும் சொல்கிறாய். அதாவது, கர்ம சந்நியாசம், நிஷ்காம கர்மயோகம் இரண்டையுமே உயர்வாகச் சொல்கிறாய். நான் இவற்றில் எதைக் கடைபிடிப்பது?’’முந்தைய ‘ஞானகர்ம சந்யாசயோகம்’ என்ற நான்காவது அத்தியாயத்தில் பல இடங்களில் கர்ம சந்நியாசத்தை போதித்த கிருஷ்ணன், இறுதிப் பகுதியில் கர்மயோகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று அர்ஜுனனுக்குக் குழப்பம். அவனுக்கு மட்டுமா, நமக்கும்தான்!

உதாரணங்கள் காட்டாமல் ஒரு விஷயத்தை விளக்க முடியாது என்பது, குரு போதனையில் ஓர் உத்தி. கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அர்ஜுனன் தர்மத்தை உணர வேண்டும், எந்த மனக்கிலேசத்துக்கும் ஆட்பட்டு தன் இலக்கை அடைவதிலிருந்து அவன் பின்வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எப்போது கர்ம சந்நியாசத்தை மேற்கொள்ள வேண்டும், எப்போது கர்மத்தை அனுசரிக்க வேண்டும் என்று, தான் பலவாறாக விளக்கியும், இரண்டையும் ஒருசேர பாவித்து, அவற்றில் எது சிறந்தது என்பதை விளக்கும்படி கேட்ட அர்ஜுனனை ஆதாரத்துடன் பார்த்தார் கிருஷ்ணன்.

சொல்பவர் யார், அவர் சொல்வது எத்தகைய விஷயம் என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாதவனாக அர்ஜுனன் இருந்தது வேடிக்கையானதுதான். தனக்குப் புரியவில்லை, தன்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்ற நோக்கிலேயே கேட்கும்போது, பகவான்கூட அவனுக்குச் சாதாரணனாகவே தெரிகிறார். அதனாலேயே அவர் சொல்வதும் அவனுக்குச் சாதாரணமாகவே இருக்கிறது.

இதற்கு இன்னொரு காரணம், அந்த சூழ்நிலையிலிருந்து, தான் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற அவனுடைய ஆழ்மன விருப்பம்தான். எவ்வளவுதான் திரும்பத் திரும்பச் சொன்னாலும், அதில் உட்பொருளை கிரகித்துக் கொள்வதிலோ அல்லது சொல்பவர் கிருஷ்ணன், அவர் சொல்வதற்கு மேல் ‘அப்பீலே’ கிடையாது என்று தீர்மானிக்கவோ அவனால் இயலவில்லை. அதனால்தான் அப்போது அப்படிச் சொன்னாயே, இப்போது இப்படிச் சொல்கிறாயே என்றெல்லாம் கேட்டு மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க அவன் முயற்சிக்கிறான் போலிருக்கிறது! இதனால் கிருஷ்ணனே அயர்வடைய மாட்டாரா, தன்னை விட்டுவிட மாட்டாரா என்றும் எதிர்பார்க்கிறான்!

கிருஷ்ணனுக்குப் புரியாததா! அந்த குருக்ஷேத்திரப் போரின் நாயகன் அர்ஜுனன், அவனுடைய பராக்கிரமம்தான் பாண்டவர்களுக்கான வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை அறியாதவரா!  அதனாலேயேதான் பொறுமையாக அவனுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’, ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும்’ என்பதெல்லாம் பின்னால் வந்த சொலவடை களாக இருந்தாலும், அதைப் பரிபூரணமாக அறிந்தவர்தானே கிருஷ்ணன்! அர்ஜுனன் மனத்துணிவை விட்டுவிடக் கூடாது என்றுதான் கிருஷ்ணன் எதிர்பார்க்கிறார்.

எதிரிகளிடம் அவன் காட்டும் பச்சாதாபம், அவனுடைய வீரத்தை செல்லாக் காசாக்கிவிடக் கூடாது என்பதைத்தான். பொறுமையாக அவனை தர்மத்தின் திசை நோக்கித் திருப்ப வேண்டும். அதனால்தான் அவன் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளித்து, அவன் உடனே புரிந்து கொள்ளாவிட்டாலும், மேன்மேலும் விளக்கமாக பதிலளித்து அவனுடைய குழப்பத்தை முழுமையாக நீக்க முயற்சிக்கிறார்.

ஆகவே அர்ஜுனனுக்கு இப்படி பதில் சொல்கிறார் அவர்;

ஸந்யாச: கர்மயோகஸ்ச நி:ச்ரேயஸகராவுபௌ
தயோஸ்து கர்மஸந்யாஸாத்கர்மயோகோ விசிஷ்யதே (5:2)

‘‘கர்மத்தைவிட்டு விலகுவது, கர்மத்தை இயற்றுவது இரண்டுமே சிறப்பானவைதான் என்றாலும், கர்ம சந்நியாசத்தைவிட கர்ம யோகமே மேலானது.’’ இயல்பான செயல்களை அதனதன் போக்கு போலவே நிறைவேற்றுவதுதான் நிஷ்காம கர்மம். ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து ஓரிடத்தை அடைய வேண்டுமானால், அதற்குப் பல சாதனங்கள் உள்ளன. சேருமிடத்திற்கான பல வழிகள் உள்ளன. வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், சாதனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தேர்வு எப்படியாயினும் போய்ச்சேர வேண்டியதுதான் முக்கியம்.

ஆனால் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு, அதில்தான் பயணிக்க வேண்டும். இந்த வழியில் போகலாமா, இன்னொரு வழியில் போகலாமா என்ற குழப்பம், போய்ச் சேரவேண்டிய காலத்தை நீட்டிக்கும் அல்லது போய்ச்சேர முடியாமலேயே போனாலும் போய்விடும்.

வீட்டுப் படி இறங்கியாயிற்று. அதற்கு முன்னாலேயே அந்தப் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டாயிற்று. அப்புறம் என்ன, நேராகப் போகவேண்டியதுதானே! வழியில் நண்பர் சந்திக்கிறார், அவர் புது யோசனை தருகிறார் என்றெல்லாம் சாக்கு சொல்லி நம் முயற்சியைக் கைவிட்டு வீட்டிற்குத் திரும்புவது முறையா? அப்படித் திரும்புவதாக எண்ணம் ஏற்படுமானால், ஆரம்பத்துக்கே அது மோசம். ஆமாம், திட்டமிடுதலில் நாம் ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறோம், இலக்கை அடைவதில் நாம் திட மனதோடு இல்லை என்றுதானே பொருள்?

ஆனால், அப்படி போவதைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது கர்மத்தை விடுதல், அதாவது கர்ம சந்நியாசம் மேற்கொள்ளுதல் என்றாகிவிடும். மாறாக, பயணத்தை மேற்கொண்டோமானால் அது கர்ம யோகம், அதாவது கர்மத்தை அனுஷ்டிப்பது என்பதாகும். இவற்றில், கர்ம யோகமாகச் செய்தால், போவதாகிய செயல் நிறைவேறும், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள், விளைவுகள் என்ன என்று தெரிய வரும், அப்படிப் போகும்போது ஏற்படக்கூடிய அனுபவங்கள் அறிவை வளர்க்கும், ஆகவே கர்ம யோகம் சிறந்தது, என்பது கிருஷ்ணனின் வாதம்.

கர்மாவை விட்டு விலகியிருப்பது ஞானியின் தன்மை. அவரைப் பொறுத்தவரை அது அவருக்குச் சிறப்பு சேர்ப்பது. ஆனால், அர்ஜுனன் அப்படி விலகி நிற்க முடியுமா? அவன் ஞானியல்ல என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவன் இந்தப் போரை நிகழ்த்தியே தீரவேண்டும் என்ற கர்ம நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டவன். அதாவது, ஒரு ஞானியைப் போல கர்மத்திலிருந்து விலகுவது வேறு, ஒரு கோழையாக, பொறுப்பைத் தட்டிக் கழிப்பது வேறு. நிஷ்காம கர்மத்தில் அதாவது செயலை மேற்கொள்வதில் ஒரு ரகசியமான பலவீனம் இருக்கிறது. அது, பலனை எதிர்பார்ப்பது! பலனை எதிர்பார்க்காத ஞானம் இருப்பதால்தான் ஞானிகள் கர்ம சந்நியாசத்தை மேற்கொள்கிறார்கள்.

நாளைக்காக சம்பாதிப்பது, சேமிப்பது என்பது சராசரி மனிதச் செயல்கள். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், நாளை என்பது வந்த பின்பும், மறுநாளைக்காக சம்பாதிப்பது, சேமிப்பது என்று செயல் தொடர்வதுதான்!அப்படியென்றால் நாளை என்பதன் எல்லை எது? மறுநாளா, அடுத்த நாளா, அதற்கடுத்த நாளா? அதோடு இதில் பெரிய துக்கம் என்னவென்றால் நாளைக்காக சம்பாதிப்பதில் ஆர்வமாக இருப்பதால் இன்றைய தினத்தை நம்மால் பூரணமாக அனுபவிக்க முடியாததுதான். இதே துக்கம், நாளை, நாளை, நாளை என்று எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் மரணம் வரைக்கும்!

இதுவும் நிஷ்காம கர்மம்தான்! அதாவது இன்றைய கர்மாவின் பலனை நாளைக்கு எதிர்பார்ப்பது! ஆனால் நிஷ்காம கர்மம் சுலபமானது என்று கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். ஒரே நிபந்தனை – பலனை எதிர்நோக்காத கர்மா. ஓர் உண்மையான கலைஞன் தனக்கு விருது கிடைக்கும், பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்துத் தன் கலையை வளர்த்துக் கொள்வதில்லை. அவனுக்கு அது ஆத்ம திருப்தியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

அதனால்தான் அரிய திறமை கொண்ட சில கலைஞர்கள், யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமல், முரட்டுத்தனமாக இருப்பார்கள். அவர்கள் தங்களை, தங்களுக்குத் தெரிந்த கலை மூலமாக வளர்த்துக் கொள்வார்கள். அதாவது, தங்கள் மனதை வளர்த்துக் கொள்வார்கள். அதற்கு துரோகம் இழைத்துவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். அதனாலேயே அவர்கள் தங்களுடைய வித்தைக்கு உரிய மரியாதையையோ, பாராட்டையோ, விருதையோ எதிர்பார்க்காமலேயே வாழ்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் அவர்கள் கோராமலேயே அவர்களை வந்தடைகின்றன. இந்தக் கலைஞர்களும் நிஷ்காம கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள்தான்! இதைத்தான் கிருஷ்ணன் வலியுறுத்துகிறார்.

‘‘அர்ஜுனா, உன் திறமையைப் பிறர் பரிகசிக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதே. உன் திறமையை வெளிக்காட்டுவதாகிய கர்மாவை செயல்படுத்து. அதிலிருந்து பின்வாங்காதே. கர்ம சந்நியாசத்தைவிட, கர்மயோகம் மேலானது’’ என்கிறார். அர்ஜுனன் பயின்ற பாடங்களில் ஒன்று வில்வித்தை. போர்க்குணம் மிகுந்த ஒரு க்ஷத்திரியனின் இன்றியமையாத கல்விப் பிரிவுகளில் ஒன்று அது. அதை அவன் பயன்படுத்த வேண்டும். அதாவது நிஷ்காம கர்மாவாக அனுசரிக்க வேண்டும். தற்காப்புக்காகவோ, பிறரைக் காக்க வேண்டும் என்பதற்காகவோ, எதிரியின் படையெடுப்பை சமாளிப்பதற்காகவோ, இன்னொரு நாட்டை வெல்ல, அதன்மீது போர்த் தொடுப்பதற்காகவோ அவன், தான் கற்ற வில் வித்தையைப் பயன்படுத்தினான்.

அதேபோன்ற ஒரு தருணம்தான் இப்போது வாய்த்திருப்பதும். இதற்கு முந்தைய சம்பவங்களில் அவன் வில் வித்தையைப் பிரயோகப்படுத்தியபோது, எந்த மனோநிலையில் இருந்தானோ, அதே மனோநிலையில் தானே இப்போதும் இருக்க வேண்டும்? அதற்குத் தடையாகப் பாசமும், நட்பும், குரு மரியாதையும் குறுக்கிடுவானேன்? அது கூடாது என்றுதான் கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

அர்ஜுனனின் முந்தைய சந்தர்ப்பங்களில் நோக்கம் ஒன்றுதான் – எதிரி வீழவேண்டும். அது, தான் அம்பு எய்தியதாகிய அத்தகைய கர்மாவை அனுஷ்டித்ததன் பலன் – ஓர் உண்மையான கலைஞனுக்குக் கிடைக்கும் விருதுபோல. இரண்டு உத்தமர்களை உதாரண புருஷர்களாகக் காட்டலாம். ஒருவர் மகாவீரர். இவர் கர்ம சந்நியாசத்தை மேற்கொண்டவர். இவர் கர்மம் இயற்றுவதைத் துறந்தார் அதனால் நிர்வாணமே அவரது வாழ்க்கை முறையாயிற்று. இன்னொருவர் ஜனகர்.

ஒரு மன்னருக்குரிய அனைத்துக் கடமைகளிலும் கர்மாக்களிலும் ஈடுபட்டிருந்தாலும், கர்ம யோகத்தை மேற்கொண்டிருந்தாலும், இவரும் நிர்வாணத்தை அடைந்தவர்தான். ஏனென்றால் ஜனகருடைய கர்மயோகத்தில் நிர்ச்சலனம் இருந்தது, தர்மம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

fourteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi