ஆன்மிகம் பிட்ஸ்: காஞ்சியில் ஏகாம்பர நாதர்

* சென்னை திருவான்மியூரில் உலகோருக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும், மூலிகைகளின் விசேஷங்கள் பற்றியும் அகஸ்தியருக்கு உபதேசம் செய்த ஈசன், மருந்தீஸ்வரராக தரிசனம் தருகிறார்.

* மஹாராஷ்ட்ரா, ஔண்டாவில் நாகநாதம் எனும் நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கமாக அருள்கிறார். பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம் இந்த ஈசனை பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இவரை, அவரவர் இடத்திலிருந்தபடியே வேண்டிக் கொண்டாலும், நாகதோஷங்கள் நீங்குகின்றன. பாம்பு ஆபத்தும் உண்டாவதில்லை.

* பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் திருமூலநாதரே மூலவர். ஆனாலும், நடராஜப் பெருமானே பிரதான மூர்த்தி. மூவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களை உலகிற்குத் தந்த தலம் இது.

* காளஹஸ்தி காளத்திநாதர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைக் கொம்புகள், உச்சியில் ஐந்துதலை நாகம், வலக் கண்ணில் கண்ணப்பர் பெயர்த்து எடுத்து அப்பிய அவரது கண் வடு ஆகியன காணப்படுகின்றன. இத்தல புராணக் கதைகளைச் சித்தரிக்கும் லிங்கம் இது என்றே வியக்கலாம்.

* மஹாராஷ்டிரா, டாகனியில் சிறு மலைமீது பீமசங்கரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. பீமனுக்கு அருளிய மூர்த்தி இவர். இவரை நினைத்தாலேயே சகல வளங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

* கிருதயுகத்தில் நெருப்புமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்கமலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் இருந்து, தற்போது கல்மலையாக மாறியிருக்கிறது.

* திருவானக்காவலில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு குருவாக மந்த்ரோபதேசம் செய்தார். அதனால், இங்கே அகிலாண்டேஸ்வரிக்கும் ஜம்புகேஸ்வரருக்கும் திருமண வைபவம் நடத்துவதில்லை.

* காஞ்சியில் ஏகாம்பர நாதரை தரிசிக்கலாம். காமாட்சி அம்மனால் உருவாக்கப்பட்ட மண் லிங்கம் இவர். இத்தல, மாமரம் நான்கு கிளைகளிலும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகளில் கனிகளைத் தருகிறது. உற்சவ ஏகாம்பரேஸ்வரர் 5008 ருத்ராட்சங்களால் ஆன பந்தலின் கீழ் கண்ணாடி அறையில் அருள்பாலிக்கிறார்.

தொகுப்பு: நாகலட்சுமி

Related posts

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 79 (பகவத்கீதை உரை)

தெளிவு பெறுவோம்

மனநலத்தை சீர்படுத்தும் குணசீலம்