முதுகுத்தண்டு உருக்குலைவால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: கடுமையான முதுகுத்தண்டு உருக்குலைவினால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண்ணிற்கு சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைப்பான முதுகுத்தண்டு பக்கவளைவு பாதிப்பின் காரணமாக கடுமையான முதுகுவலி இந்த இளம் பெண்ணிற்கு இருந்தது. இதற்கு வழங்கப்பட கூடிய சிகிச்சையினால் மேலதிகமான சிக்கல்கள் வரக்கூடும் என்ற அச்சத்தினால் உரிய சிகிச்சை வழங்கப்படாமலேயே விடப்பட்டிருந்தது. பின்னர் காவேரி மருத்துவமனையின் மருத்துவ வல்லுநர்களால் அந்த பெண்ணுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 22 வயதான இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மார்பு முதுகுத்தண்டு 130 டிகிரி அளவிற்கு வளைந்திருந்தது. இதன் காரணமாக அப் பெண்ணின் தினசரி செயல்பாடுகளும், வாழ்க்கைத்தரமும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கியிருந்தது. 130 டிகிரி அளவிற்கு வளைந்திருந்த முதுகுத்தண்டை 60 டிகிரி என்ற அளவிற்கு குறைத்து சரிசெய்வதற்காக பல்வேறு நிலைகளில் முதுகுத்தண்டின் மேம்பட்ட, நுட்பமான உத்திகளை பயன்படுத்தி முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் திலிப் சந்த் ராஜா மற்றும் நிபுணத்துவமிக்க பிற மருத்துவர்களின் குழுவும் பிற தொழில்முறை பணியாளர்களும் இந்த இளம் பெண்ணின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 9 மணி நேரங்கள் வரை நீடித்த இந்த மாரத்தான் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை-நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், முதுகுத்தண்டு உருக்குலைவுக்கான இந்த சிகிச்சையின் தனித்துவம் குறித்து பேசுகையில்: பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் இணைந்த சிகிச்சைக் குழுவினரின் சரியான திட்டமிடலும், தெளிவான அணுகுமுறையும் இந்த இளம் பெண்ணிற்கு சிறப்பான சிகிச்சை பலன் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறது. இப்பெண்ணின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் நம்பிக்கையை மீண்டும் வலுவாக நிலைநாட்டவும் உதவியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி