கீரையும் லாபம்… காயும் லாபம்…

பட்டம் பார்த்து பயிர் செய்வதுதான் விவசாயத்தில் அடிப்படையான விசயம். நிலத்திற்கு தகுந்த படியும், பருவத்திற்கு உகந்தபடியும் பயிர் செய்து வந்தால் சராசரி விளைச்சலை விட அதிகமாகப் பெறலாம். அதேசமயம் விளைபொருட்களின் விலையும் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் நெல் பயிரிடும் விவசாயிகள் அறுவடை முடிந்த பின்னர் நிலத்தை கிடப்பில் போடாமல், அந்தப் பட்டத்திற்கு என்ன பயிரிட வேண்டுமோ அதனை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் சேலை பஞ்சாயத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் மணத்தக்காளியைப் பயிரிட்டு வருகிறார். மணத்தக்காளியை கீரைக்காக மட்டுமே வளர்த்து வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் கீரையுடன் சேர்த்து மணத்தக்காளி காய்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் விவசாயி ரவியைச் சந்தித்தோம்.

“ என்னைப் பொருத்தவரை விவசாய நிலத்தை வெறுமனே போடக்கூடாது என நினைக்கிறேன். இதனால் ஒரு பயிர் முடிந்தவுடன் வேறு பயிரை சாகுபடி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு பயிரை எங்கள் நிலத்தில் விதைத்தபடி இருப்போம். எனக்குத் தெரிந்து எங்கள் அப்பா காலத்தில் இருந்தே விவசாயம்தான் எங்களுக்கு பிரதான தொழில். நெல், சோளம், நிலக்கடலை, கரும்பு, காய்கறிகள் என பல விதமான பயிர்களை எனது அப்பா காலத்தில் இருந்தே சாகுபடி செய்து வருகிறோம். எனக்கு 7 வயது இருக்கும்போதே அப்பாவோடு வயலுக்குப் போவேன். அப்போதிருந்தே அப்பாவோடு சேர்ந்து விவசாய வேலைகள் எல்லாம் செய்து வந்தேன். அப்பாவுக்குச் சொந்தமானநிலத்தை நாங்கள் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் சமமாகப் பிரித்துக்கொண்டு அதில்தான் இப்போது விவசாயம் செய்து வருகிறோம்.எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கரில் 30 வருடத்திற்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறேன். நெல், நிலக்கடலை, காய்கறிகள் என பட்டத்திற்கு தகுந்தபடி பயிர் செய்து வருகிறேன். கார்த்திகைப் பட்டத்திற்கு உகந்தது மணத்தக்காளி பயிரிடுவதுதான். ஏனெனில் மணத்தக்காளி கீரையில் இருந்து 6 மாதம் வரை விளைச்சல் எடுக்கலாம். பனிக்காலத்தில் கீரைகள் நன்கு வளரும். அதே சமயம் மணத்தக்காளி காய்களும் நன்றாக அளவில் பெருத்து காய்க்கும். அதனால் மணத்தக்காளி பயிரிடலாமென முடிவெடுத்து கடந்த கார்த்திகை மாதத்தில் நிலத்தை தயார் செய்தேன்.

மணத்தக்காளி பயிரிடுவதற்கு மட்டும் 40 சென்ட் நிலத்தைத் தேர்வுசெய்து நடவுக்கு முன்பாக நான்கு முறை உழுதேன். எங்கள் பகுதியில் கரிசலும் மணலும் சேர்ந்த மாதிரியான நிலம். கொஞ்சம் இறுக்கமாக இருந்ததால் நான்கு முறை உழ வேண்டியிருந்தது. முதல் இரண்டு உழவுக்குப் பிறகு 40 சென்ட் நிலத்தில் ஒரு டன் தொழு உரத்தை கொட்டி அந்த உரம் நன்றாக மண்ணுக்கு மேலும் கீழும் போகும்படி மீண்டும் இரண்டு முறை உழுதேன். அதன் பிறகு மணத்தக்காளியை வரிசை முறையில் நடவு செய்வதற்காக வரிசை பாத்தியை தயார்செய்து நடவுக்கு முன்பு தண்ணீர் விட்டேன். மணத்தக்காளி நாற்றுகளை வளர்ப்பதற்கு தனியாக விதைகள் விதைத்து நாற்று வந்த பிறகு அந்த நாற்றுகளை எடுத்து உழுது வைத்திருக்கிற நிலத்தில் நடத் தொடங்கினேன். சரியாக ஒரு அடிக்கு ஒரு நாற்று வீதம் நட வேண்டும். அப்படி நட்டபிறகு ஒரு வாரம் கழித்து தண்ணீர் விட வேண்டும். ஒரு வாரத்திலே நாற்றுகள் நன்றாக வளரத் தொடங்கும். நாற்று நட்டு 12ம் நாளில் களை எடுக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் களை எடுக்க வேண்டும். செடிகள் வாடாத அளவு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையோ தண்ணீர் விட வேண்டும்.

சரியாக இரண்டாவது மாதத்தில் இருந்து கீரைகளை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். எனது நிலத்தில் இருக்கிற மணத்தக்காளி கீரைகளை இரண்டு முறைகளில் விற்பனை செய்கிறேன். ஒன்று கீரையாக விற்பனை செய்வது. இன்னொன்று மணத்தக்காளிக் காய்களைப் பறித்து விற்பனை செய்வது. கீரைகளின் வளர்ச்சிக்காகவும் காய்கள் நன்றாக பெருக்க வேண்டும் என்பதற்காகவும் யூரியா 10 கிலோ, டிஏபி 25 கிலோ, காம்ப்ளக்ஸ் 15 கிலோ என்ற அளவில் சேர்த்து செடியின் அடியில் தூவுவோம். செடிமேல் தூவினால் உரங்கள் வேருக்குச் செல்லாது என்பதால் அந்த உரங்களை அடியில் தூவி தண்ணீர் விட்டுவிடுவோம். இரண்டு மாதத்தில் இருந்து விளைச்சல் தருகிற இந்தக் கீரையில் வாரம் இரண்டு முறை கீரை அறுவடை செய்கிறேன். வாரத்திற்கு கீரை பாதி பறித்தது போக மீதக் கீரைகளை காய்களுக்காக அப்படியே விட்டு விடுவேன். ஒரு வாரத்தில் இரண்டு முறை கீரையும், ஒரு முறை காய்களும் பறிக்கிறேன். ஒரு வாரத்திற்கு சராசரியாக 200 கட்டு கீரைகள் வரை கிடைக்கிறது. காய்களும் 50 கிலோ வரை வாரத்திற்கு கிடைக்கிறது. கீரைகளை சிறு வியாபாரிகளே ஒரு கட்டு 15 ரூபாய் என நேரடியாக வாங்கிச் செல்கிறார்கள். மணத்தக்காளி காய்களை நானே பறித்து சென்னை தி.நகரில் இருக்கிற வியாபாரிகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறேன். இந்த மணத்தக்காளி காய்கள் கிலோ ரூ.170 வரை விற்பனை ஆகிறது. சராசரியாக ரூ.150 கிடைக்கிறது. இந்தக் காய்களை வத்தல் குழம்பு செய்வதற்காக வாங்கிச் செல்கிறார்கள். இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் இந்தக் காய்களை விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார்கள். 4 மாதங்கள் விளைச்சல் தருகிற இந்தக் கீரையும், காய்களும் தொடர்ந்து ஒரே அளவில் விளைச்சலைத் தராது.

இதனால், மாதத்திற்கு இரண்டு முறை மேலே சொன்ன கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சராசரியான விளைச்சலையாவது கீரைகளில் இருந்து பெற முடியும். மணத்தக்காளியை விதைத்து அறுவடை செய்யும் ஆறு மாதகாலத்தில் செலவு என்று பார்த்தால் உழவு ஓட்டும் செலவு, தொழு உரம் வாங்கும் செலவு, களை எடுக்கும் செலவு, கலப்பு உரம் வாங்கும் செலவு, கீரைகள் பறிக்கும் செலவு என இன்னும் பல செலவுகள் இருக்கின்றன. எந்தச் செலவுகளையும் கணக்கில் வைத்தது கிடையாது. சராசரியாக சொல்லப்போனால் பாதிக்கு பாதி அதாவது என்ன வருமானம் கிடைக்குமோ அதில் பாதி செலவு என்று வைத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு 200 கட்டு கீரைகளை ரூ.15 என விற்பனை செய்வதன் மூலம் ரூ.3 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. 50 கிலோ மணத்தக்காளி காய்களை ரூ.150 என விற்பனை செய்வதன் மூலம் ரூ.7500 வருமானமாக கிடைக்கிறது. மணத்தக்காளி சாகுபடியில் இருந்து வாரத்திற்கு மொத்தமாக ரூ.10,500 வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.5,500 செலவு போனாலும் சுளையாக ரூ.5 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. 40 சென்ட் நிலத்தில் வாரத்திற்கு 5 ஆயிரம் லாபம் என்பது நல்ல லாபம்தான். இதில் விலை நிலவரம், விற்பனையைப் பொறுத்து சற்று மாறுபாடு இருக்கும். மணத்தக்காளி கீரையைத் தவிர நாட்டுக் காய்கறிகளும் பயிரிட்டிருக்கிறேன். இந்த சீசனில் காய்கறிகள், கீரைகள் என அனைத்தும் முடிந்த பிறகு அடுத்தப் பட்டத்திற்கு நெல் விதைப்பைத் தொடங்கி விடுவேன்’’ என்கிறார் ரவி.
தொடர்புக்கு:
ரவி – 99405 06440

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி