வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர தீவிரம்; சுற்றுச்சுவர் மீது இரும்பு மின்வேலி அமைக்கும் பணி தொடக்கம்: முழு உட்கட்டமைப்பு வசதிக்கு ஏற்பாடு

 

வேலூர்: வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுற்றுச்சுவர் மீது இரும்பி மின் வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உதான் பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ் வேலூர் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ₹60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றது. 700 மீட்டர் நீளமுள்ள ஓடுதளப்பாதை தற்பொழுது சிறிய பயணிகள் விமான சேவைக்காக 850 மீட்டர் ஓடுதளப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்டவை அமைப்பதற்கான சிவில் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் 51 ஏக்கர் விமான ஓடுதளமாக இருந்த இடத்தை தற்பொழுது 47 ஏக்கர் வரை பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தி 98 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் டேக் ஆப், லேண்டிங் செய்வதற்கு 25 அடி உயரத்திற்கு மேல் உயரமுள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்பதால் மேலும் 10.72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 10.72 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் தற்போது கைவிட்டுள்ளது. மேலும் இருக்கும் விமான நிலைய ஒடுதளத்தை வைத்து முதலில் சிறிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்த புல், செடிகொடிகள், மரங்கள் போன்றவை அகற்றி விமான நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது இரும்பு மின் வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: வரும் 2024ம் ஆண்டுக்குள் விமான சேவையை தொடங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி வேலூர் விமான நிலையமும் வரும் நவம்பர் மாதம் முதல் இயக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் சிறிய ரக பயணிகள் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமான நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் நுழைவு வாயில் பகுதியில் திறந்த வெளிபகுதியாக உள்ளது.

இதனால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பாடும் சூழல் உருவாகும். இதை தடுக்கும் வகையில் அப்துல்லாபுரம் ஆசனாம்பட்டு சாலை ஓரமாக முதலில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தற்போது அதன்மீது இரும்பு மின் வேலி அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறுசிறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் விமான நிலைய பணிகள் முடித்து தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!

நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!!

வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!!