இன்று ஆடி 5ம் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு; வரலட்சுமி விரதமும் இணைந்ததால் களைக்கட்டியது

வேலூர்: ஆடி 5ம் வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. ஆடி மாத 5ம் வெள்ளிக்கிழமையான இன்று வேலூர் கிராம தேவதை சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மேலும் சலவன்பேட்டை, கொசப்பேட்டை, வேலப்பாடி, ஓல்டுடவுன் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆனைகுளத்தம்மனக்கு கூழ்வார்த்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதேபோல், ஆடி 5ம் வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அகிலாண்டேஸ்வரி அம்மன், பாலாற்றங்கரை செல்லியம்மன், தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன், சுண்ணாம்புக்கார தெரு சோளாபுரியம்மன், லாங்கு பஜார் வேம்புலியம்மன், கோட்டை வளாகம் நாகாத்தம்மன், வசந்தபுரம் பூங்காவனத்தம்மன், கொசப்பேட்டை சோளாபுரியம்மன், சலவன்பேட்டை ரேணுகாம்பாள் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தனர்.

காட்பாடி வஞ்சூர் வஞ்சியம்மன் கோயிலில் மூலவர் நவதானிய வரலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார். டிட்டர்லைன் தேவி கருமாரியம்மன், கலாஸ்பாளையம் முத்துமாரியம்மன், சஞ்சீவிபிள்ளை தெரு சோளாபுரியம்மன், தொரப்பாடி நடவாழியம்மன், காட்பாடி விஷ்ணு துர்க்கையம்மன், சத்துவாச்சாரி கெங்கையம்மன், சாலை கெங்கையம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அரியூர், முருக்கேரி, குப்பம் ஆகிய 3 கிராம மக்கள் இணைந்து படவேட்டம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பொங்கலிட்டும், கூழ்வார்த்தும் வழிபட்டனர். இந்த கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா இன்று நடக்கிறது.

இதுதவிர வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டும், ஆடு, கோழி பலியிட்டும் வேண்டுதலை நிறைவேற்றினர். கணியம்பாடி கணவாய் வனவாசவியம்மன், சேண்பாக்கம் பச்சையம்மன், காட்பாடி காந்தி நகர் முத்துமாரியம்மன், குடியாத்தம் கெங்கையம்மன், படவேட்டம்மன், வேலங்காடு பொற்கொடியம்மன், அரியூர் குப்பம் சிந்துநகர் முத்துமாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. ஆடி 5ம் வெள்ளியுடன் வரலட்சுமி விரதமும் இணைந்ததால் அனைத்து கோயில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் வரலட்சுமி நோன்பு பண்டிகை கொண்டாடும் வீடுகளில் கலசங்களில் வரலட்சுமியை எழுந்தருள்வித்து தங்கள் இல்லங்களுக்கு மகாலட்மியை அழைக்கும் வகையிலான பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி