திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி தரமானதாக அமைவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பல்வேறு செயல்முறைகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து கற்றல் ஏற்பாடுகளும் மாணவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதற்காக ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத்திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து வகை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ, மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு இக் கல்வியாண்டிலும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பான விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு