வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேருராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: வடகிழக்கு பருவமழையின் போது கனமழை மற்றும் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், பொக்லைன் வாகனங்கள், கழிவுநீரகற்றும் வாகனங்கள், திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பருவமழையின் போது தாழ்வான இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக அலுவலர்களைக் கொண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் யாவும் பருவமழையின் போது கிடைக்கக்கூடிய மழைநீரினை சேமிக்கும் வகையில் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

அதன் மூலம் உபரிநீர் வெளியேறும் பட்சத்தில் போதிய வாய்க்கால்கள் ஏற்படுத்தி குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும். குடிநீரில் போதிய குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். மேலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், நடமாடும் சுகாதார குழுக்களை அமைத்து மழையினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விரைவாக சென்று மருத்துவ உதவிகள் அளிக்கப்பட வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்து இருப்பில் வைத்திருக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை