சிறப்பு அங்கீகாரம் பெற்ற சிவப்பெறும்பு சட்னி!

ஒரு குறிப்பிட்ட பகுதியில் விசேஷத்தன்மையோடு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஒன்றிய அரசால் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அந்தப்பொருட்களுக்கு வேறு பகுதியில், அந்த சிறப்புத்தன்மை இருக்காது என்பதால் இந்த ஸ்பெஷல் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதன்படி நமது தமிழ்நாட்டின் பெருமைகளான மதுரை மல்லி, குமரி மட்டி வாழை, ஆத்தூர் வெற்றிலை, திண்டுக்கல் பூட்டு போன்ற பொருட்கள் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு எய்திருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது ஒடிசா மாநிலத்தின் ஒரு பொருளுக்கு கிடைத்த புவிசார் குறியீடு, மற்ற மாநில மக்களின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது. அப்படி என்ன ஒரு சிறப்புப் பொருளுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது! என்கிறீர்களா? சிவப்பு எறும்பு சட்னிதாங்க அந்த சிறப்புப் பொருள். கால்சியம், புரதச்சத்து மிகுந்த இந்த சட்னியைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருக்கலாம் என்பது ஒடிசாவில் உள்ள சில தரப்பு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இதனால் அந்த மாநிலத்தில் சிவப்பு எறும்பு சட்னி, நம்ம ஊர் வெங்காயச் சட்னி போல விரும்பி உண்ணப்படுகிறது. இத்தகைய சட்னிக்குத்தான் ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம், புவிசார் குறியீட்டை `வச்சிக்குங்க ராசா’ என வழங்கி மகிழ்ந்திருக்கிறது. நம்ம ஊரில் எறும்பைத் தின்றால் கண் பார்வை தெளிவாக இருக்கும் என்பார்கள். ஒடிசாவில் எறும்பு சட்னி தின்றதால் புவிசார் குறியீடே கிடைத்திருக்கிறது! கொரோனாவுக்கு மருந்து?கொரோனா சமயத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்ற நிலையில்தான் பலர் இருந்தோம். அந்த சமயத்தில், சிவப்பு எறும்பு தின்றால் கொரோனா தாக்காது, அதையே நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்தாக பரிந்துரைக்க வேண்டும் என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிரம்பி இருப்பதால் இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், இந்த சட்னி கொரோனாவை விரட்டி அடிக்கும் என்பதால் நாட்டு மக்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி இருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, மனு தாக்கல் செய்தவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரையும் வழங்கி இருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

வீரா

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்