நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் 9 பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா கடிதம்

புதுடெல்லி: ‘‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அரசு எதைப் பற்றி விவாதிக்கப் போகிறது என்பது எங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் 9 முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடக்குமென ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 5 நாட்கள் சிறப்பு கூட்டம் நடக்கும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இக்கூட்டத் தொடர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனால், இக்கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவை பாரதம் என பெயர் மாற்றுதல் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அதுதொடர்பாக விவாதிக்கவும் கூட்டப்பட்டிருக்கலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்த சிறப்பு கூட்டத் தொடர், மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் நோக்கம், என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி எங்களில் யாருக்கும் எதுவும் தெரியாது. எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது எல்லாமே, சிறப்பு கூட்டத்தின் 5 நாட்களும் அரசு அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அமர்வு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, மணிப்பூர் வன்முறை, அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் துயரப்படும் தற்போதைய பொருளாதார நிலை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதாக அரசு அளித்த வாக்குறுதி, அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை, அரியானா போன்ற மாநிலங்களில் அதிகரித்து வரும் வகுப்புவாத பிரச்னைகள், இந்திய எல்லையில் சீனாவின் அதிகரித்து வரும் அத்துமீறல்கள், சாதிவாரி கணக்கெடுப்பின் அவசர தேவை, ஒன்றிய, மாநில அரசுகள் இடையேயான பிரச்னைகள், இயற்கை பேரழிவுகளின் தாக்கம் ஆகிய 9 முக்கிய பிரச்னைகள் குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

பொதுமக்கள் பிரச்னை குறித்து விவாதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் சிறப்பு கூட்டத்தில் பங்கேற் நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். அதில், இந்த 9 முக்கிய பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

19ம் தேதியில் இருந்து புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். அப்போது அந்நிகழ்ச்சியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 18ம் தேதி சிறப்பு கூட்டத்தின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், விநாயகர் சதுர்த்தி தினமான 19ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று நாடாளுமன்ற அலுவல்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளன. வடமாநிலங்களில் வரும் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிக்க மாட்டோம்
காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘எந்த அஜெண்டா பற்றியும் விவாதிக்காமல், அதைப் பற்றி தெரிவிக்காமல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். இந்த அமர்வு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளோம். பிரதமர் மோடி பீதியிலும், சோர்விலும் இருக்கிறார்’’ என்றார்.

எல்லாவற்றுக்கும் பதிலளித்து விட்டோம்
சோனியா கடிதம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை அரசியலாக்கி, தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தொடருக்கு முன்பாக ஒருபோதும் அரசியல் கட்சிகளை ஆலோசிக்கும் நடைமுறை இல்லை. சோனியா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் அனைத்தும் மழைக்கால கூட்டத்தொடரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஏற்கனவே விவாதிக்கப்பட்டு பதிலளிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Related posts

வழிவிடுமாறு கூறியதால் ஆத்திரம் ஓட்டுநருக்கு உருட்டு கட்டை அடி

மத்திய கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

திருப்போரூர் அருகே சோகம் கால்வாயில் விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி