சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட வேண்டும்.. மக்களின் குரலை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளை பேச அனுமதியுங்கள் : ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி நம்பிக்கை

டெல்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி இன்று தனது பணிகளை முறைப்படி தொடங்கினார். 18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மக்களவை சபாநாயகராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம்பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அரசுக்கு அரசியல் அதிகாரம் உள்ளது; ஆனால் எதிர்க்கட்சிகள்
இந்திய மக்களின் குரலை பிரதிபலிக்கின்றன. இந்த முறை பெருமளவிலான மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த அவை சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சபாநாயகர் தனது பணியை செய்வதில் எதிர்க்கட்சிகள் உதவிகரமாக இருக்கும். நம்பிக்கை அடிப்படையிலேயே ஒத்துழைப்பு என்பது நிகழ முடியும்.மக்களின் குரலை பிரதிபலிக்கும் அவையில் சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட வேண்டும். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கட்சிகள் காப்பாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு தருவதன் மூலம் அரசியலமைப்பை காக்கும் கடமையை சபாநாயகர் செய்வார் என நம்புகிறேன்.

இந்த அவை எவ்வளவு திறமையாக நடத்திச் செல்லப்படுகிறது என்பது ஒரு பிரச்சனை அல்ல. இந்த அவையில் இந்திய மக்களின் குரல் ஒலிப்பதற்கு எந்த அளவு அனுமதிக்கப்படுகிறது என்பதே கேள்வி. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் இந்த அவையை திறமையாக நடத்தலாம் என்ற கருத்தே ஜனநாயக விரோதம்.அரசியல் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் . எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் கடமையை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும்,”இவ்வாறு பேசினார்.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் ஸ்பெயின் அணி

பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்

தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி