சபாநாயகர் பதவி, முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு, நிதிஷ் போட்டாபோட்டி: ஆட்சி அமைக்கும் முன்பே கதிகலங்கும் பாஜ

புதுடெல்லி: மக்களவையில் சபாநாயகர் பதவி, முக்கிய அமைச்சகங்களை கேட்டு ‘கிங் மேக்கர்கள்’ சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போட்டா போட்டி போடுவதால், ஆட்சி அமைக்கும் முன்பே பாஜ கதிகலங்கிப் போயுள்ளது. மக்களவை தேர்தலில் இம்முறை பாஜவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென்றால், 16 எம்பிக்களை வைத்துள்ள தெலுங்கு தேசம் மற்றும் 12 எம்பிக்களை வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு பாஜவுக்கு அவசியமாகி உள்ளது. இதன் காரணமாக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாகி உள்ளனர். ஏற்கனவே இவ்விரு தலைவர்கள் அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலிகள். குட்டையை குழப்பி மீன்பிடிப்பதில் கில்லாடிகள்.

எனவே தங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க அவர்கள் விரும்பவில்லை. பாஜ அரசுக்கு ஆதரவளிக்க இப்போதே பல்வேறு நிபந்தனைகள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2009ல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு தேசத்தின் பாலயோகி மக்களவை சபாநாயகராக இருந்தார். அதே போல, இம்முறையும் சபாநாயகர் பதவி தர வேண்டுமென சந்திரபாபு கூறி உள்ளார். இதற்கு காரணம், தற்போது மக்களவையில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை இல்லை. கூட்டணி ஆட்சியே நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த இரு தேர்தல்களில் பெரும்பான்மை பெற்ற பாஜ, இரு முறையும் சபாநாயகர் பதவியை தங்கள் வசமே வைத்துக்கொண்டது.

இதைத் தவிர ரயில்வே உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென இரு கட்சிகள் கேட்டுள்ளன. ஏற்கனவே 3 ஒன்றிய அமைச்சர் பதவி தர நிதிஷ் குமாருக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 போதாது 4 அமைச்சர் பதவி, ஒரு இணை அமைச்சர் பதவி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திரா, பீகார் இரு மாநிலங்களுமே பல ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து கேட்டு வருகின்றன. எனவே தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென நிதிஷும், சந்திரபாபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஆந்திராவில் புதிய தலைநகர் அமராவதி அமைக்க கூடுதல் நிதி தர வேண்டுமென சந்திரபாபு கேட்டுள்ளார். நிதிஷ், அவர் தரப்புக்கு மாநிலத்தில் ஏழைகளுக்கான திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசின் பங்களிப்பாக கூடுதல் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டுமென பாஜவிடம் கேட்டுள்ளார். இதனால் ஆட்சி அமைக்கும் முன்பே பாஜ மேலிடம் கதி கலங்கி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாடாளுமன்றத்தில் மணிப்பூரின் 2வது எம்பியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி