உலக நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பது ‘தமிழ்’: சபாநாயகர் அப்பாவு பெருமிதம்

நெல்லை: இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தமிழ் மொழி மட்டும் தான் ஆட்சி மொழியாக உள்ளது என நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழாவை துவக்கி வைத்து தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேசினார். தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 5 இடங்களில் மண்டல அளவிலான இலக்கிய திருவிழாக்கள் தொடர்ந்து 2ம் ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த 2ம் ஆண்டு இலக்கியத் திருவிழா முதன் முதலாக நெல்லையில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நேற்று துவங்கியது. இதை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்து பேசியதாவது: உலகில் தோன்றிய முதல் மூன்று மொழிகளில் தமிழ் மொழி தான் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் முயற்சியில் தான் தமிழுக்கு முதன் முதலாக செம்மொழி அந்தஸ்து கிடைத்தது.

இந்தியாவிற்கு வெளியே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பது பெருமை அளிக்கிறது. வெளிநாடுகளிலும் ஆட்சி மொழியாக இருப்பது தமிழ் மட்டும் தான்.  ஆனால் இந்திய அளவில் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. சமஸ்கிருத மொழிக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு 10 கோடி பேர் பேசும் தமிழ் மொழிக்கு ஆண்டுக்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி தான் நிதி ஒதுக்குகிறது. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்