மனவெளிப் பயணம்-எமோஷனல் இன்டெலிஜன்ஸ் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை அனைவருக்கும் மிகத்தொந்தரவாக இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், உணர்ச்சிகளை கையாளத் தெரியாமல் இருப்பதுதான். அதுவும் இந்த டிஜிட்டல் தளத்தில் எந்தெந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், எந்த உணர்வை அளவாக வெளிப்படுத்த வேண்டுமென்பது தெரியாமல், உணர்ச்சி வசப்பட்டு பல நியூஸ் சேனல்களில் வைரல் நியூஸாக வெகுஜன மக்கள் முதல் ஆளுமைகள் வரை உணர்ச்சிக் கொந்தளிப்பை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்கள் உணர்வுகளை சொல்லத் தெரியாமல், ஏதோவொரு தருணத்தில் எரிமலை வெடிப்பது போல், பொங்கியெழும் தருணம் அனைவருமே உணர்ந்தது. இம்மாதிரி பொங்கியெழும் மனநிலையில் நமது வீடா, நண்பர்களா, அலுவலகமா, நடு ரோடா, சமூக வலைத்தளமா என்றெல்லாம் யோசிக்க முடியாது.

அடக்கி வைத்த உணர்வுகளை எல்லாம், உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறி, கத்தி, கூப்பாடு போட்டு விடுவார்கள். டிஜிட்டல் யுகம் வரும் முன், இந்த விஷயங்கள் எல்லாமே அந்தந்த இடங்களில் முடிந்து விடும். ஆனால் இன்று அப்படியல்ல. மேலே சொன்ன மனித உணர்ச்சிகள் எல்லாமே வீடியோவாக, மீம்ஸாக மாறி, சமூகத்தின் கேலி, கிண்டலுக்கு பாரபட்சம் இல்லாமல் மனிதர்கள் வேடிக்கைப் பொருளாக மாறி நிற்கிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி சார்ந்த மற்றும் புது ஐடியாக்களை வைத்து துவங்கும் தொழில் முனைவோர்களுக்கும் மற்றும் அதில் பங்கேற்கும் இளம் தலைமுறையினருக்கும் புதுப்புது விஷயங்களை வாழ்க்கையில் கற்றுக் கொள்வது போல், இன்று பலரும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் கற்றுக்கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் முன் வருகிறார்கள்.

உணர்ச்சி நுண்ணறிவு என்பது உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது, அத்துடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு, அது என்ன மாதிரி பாதிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வதாகும். இந்த சொல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் ஜான் மேயர் மற்றும் பீட்டர் சலோவி ஆகியோரால் உருவாக்கப்பட்டது, ஆனால் பின்னர் உளவியல் நிபுணர் டேனியல் கோல்மேன் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது.

‘‘ப்ரீ ஃபிரன்ட்டல் கார்டெக்ஸ்” என்பது மூளையின் முன் பகுதியாகும். இந்தப் பகுதி தான் ஒருவருடன் சண்டை போட வேண்டுமென்று நினைத்தால், உடனே சண்டை போட்டு விடு என்று நமக்கு தெரிவிக்கும். அதே போல் மூளையில் “லிம்பிக் சிஸ்டம்” ஒன்று இருக்கும். இது தான் எமோஷனலையும், இன்டெலிஜென்ஸையும் இணைத்து, வேலையைச் செய்யும். இந்த லிம்பிக் சிஸ்டம் இருப்பதால் தான், நாம் பகுத்தறியும் திறனுள்ளவர்களாக இருக்கிறோம்.

உணர்ச்சி நுண்ணறிவு என்பதும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்பதும் உணர்ச்சிகளை உணரவும், நிர்வகிக்கவும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான திறனாகும். அதாவது ஒருவரின் சொந்த உணர்ச்சிகள் மற்றும் பிறரது உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய திறனாகும். இதனை ஈக்யூ என்றும் கூறுவார்கள். உணர்ச்சி நுண்ணறிவு உடையவர்கள் தங்களது உணர்ச்சிகளை நன்கு கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் கற்றுக் கொண்டவர்கள். மேலும் தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்வார்கள்.

தற்போதைய பரபரப்பான காலக்கட்டத்தில் பலரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், நிதானமில்லாத தன்மையுடனும் இருக்கிறார்கள். உதாரணமாக ரோடுகளில் சிக்னல் போடுவதற்கு முன் போவதாக இருக்கட்டும், மருத்துவமனை மற்றும் வரிசைகளில் நிற்கும் இடங்களில் முதலில் எங்களுடைய தேவைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறுவதாக இருக்கட்டும், குடும்பங்களில் ஒரு தனி மனிதரின் ஆசைகளை மட்டுமே முன்னெடுக்க வேண்டுமென்று நச்சரிப்பதாக இருக்கட்டும் இப்படி பல விஷயங்களை அடிக்கோடிட்டு காண்பிக்க முடியும். அப்படியென்றால் குறைவான உணர்ச்சி நுண்ணறிவு கொண்டவர்களின் செயல்பாடுகளின் தீவிரத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குறைந்த உணர்ச்சி நுண்ணறிவின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று உணர்ச்சிகளை நிர்வகித்தல் மற்றும் வெளிப்படுத்துவதில் சிரமமாகும். சக ஊழியர்கள் மற்றும் உறவுகளின் கவலைகளை சரியான முறையில் ஒப்புக் கொள்வதில் நீங்களே போராடலாம் அல்லது அவர்களின் செயலைக் கேட்பதில் நாமே மல்யுத்தம் செய்யலாம். உதாரணமாக நமக்குத் தெரிந்தவர்களுடன் நமக்கான உரையாடல்கள் சிரமமாக உள்ளதா?

திட்டங்கள் திட்டமிட்டபடி நடக்காத போது, நீங்கள் மீண்டும் மீண்டும் மற்றவர்களைக் குறை கூறுகிறீர்களா? நீங்கள் அளவுக்கு அதிகமான கோபத்திற்கு ஆளாகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு பதில் ஆமாம் என்றால், உணர்ச்சி நுண்ணறிவு குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கிறது என்கிறார்கள்.

குறைவான உணர்ச்சி நுண்ணறிவின் பாதகங்கள்:

* குறைவான உணர்ச்சி நுண்ணறிவு இருக்கும் போது, மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்வதில் குறைவான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதனால் உறவுகளுக்குள் சரியான புரிதல் இல்லாத தன்மையுடன் இருப்பார்கள்.

* சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய விழிப்புணர்வுடன் இருப்பதில் தடுமாற்றம் அடைவார்கள். தொடர்ந்து ஒரு செயலை முயற்சி செய்வதில், தயக்கம் காட்டுவார்கள்.

* இலக்குகளை நிர்ணயிப்பதில் தடுமாற்றமும், அதனால் அந்தந்த நேரத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டே போவார்கள்.

எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு அற்று, பிரச்னைகளையோ அல்லது வாய்ப்புகளையோ கையாளுவதில் பதற்றம் அடைவார்கள்.பொதுவாக நம் உறவுகளின் மீதான சமநிலைத் தன்மை மற்றும் நிலையான வேலை வாய்ப்பை வழங்காத நிறுவனங்கள் மற்றும் பலனளிக்காத ஊழியர்களின் எண்ணிக்கையை வேலை நிறுத்தம் செய்வது என்று அவர்களின்உணர்ச்சி நுண்ணறிவை பற்றி கவலை கொள்ளாத சமூகச் சூழல் நிலவுகிறது. வேலையையும், வாழ்க்கைக் கொள்கையையும் உருவாக்குவது மட்டும் போதுமானதல்ல.

கலாச்சார வரைமுறைகளுடன் சொல்லக்கூடிய கொள்கைகளை பயன்படுத்துவதை ஆதரிக்கும் சூழலும் நிலவ வேண்டும். குடும்ப உறவுகள், பணியாளர்களின் நல்வாழ்வு அவர்களின் பிற அமசங்களை சேதப்படுத்தாமல், நெகிழ்வான மற்றும் புதிய தீர்வுகளை குடும்பமும், நிறுவனங்களும் கண்டுபிடிக்க வேண்டும். இன்றைய ஆற்றல் மிக்க பணியாளர் மாற்றம் மற்றும் குடும்ப உறவுகளில் உள்ள இறுக்கம் எல்லாவற்றையும் கடந்து ஒரு இணக்கத் தன்மையுடன்.

நெகிழ்வுத் தன்மையுடன் செயல்பட எமோஷனல் இன்டெலிஜென்ஸ் அவசியமான ஒன்றாக இருக்கிறது. உண்மையில் மனஅழுத்த மேலாண்மையில் உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பதற்கான முதல் படியாக உங்களின் தற்போதைய உணர்ச்சி அனுபவம், உங்களின் ஆரம்பகால வாழ்க்கை அனுபவங்களின் பிரதிபலிப்பாகும் என்பதாக கூறப்படுகிறது.

கோபம், சோகம், பயம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை நிர்வகிக்கும் உங்களின் ஆரம்பகால அனுபவங்களின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலின் பங்களிப்பால் மட்டுமே தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். அதனை புரிந்து கொண்டு விட்டால், நிகழ்காலத்தில் உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்புமிக்க விஷயமாகவும், உங்களின் சுய சொத்தாகவும் பார்க்கக்கூடும். உணர்ச்சி நுண்ணறிவை மேம்படுத்துவதால், தங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை பார்க்கலாம்.

உணர்ச்சி நுண்ணறிவின் ஏழு கூறுகள்:

விழிப்புணர்வு : நாம் விழிப்புணர்வுடன் இருக்கும் போது, நம் பலம் மற்றும் பலவீனங்களையும், சூழலுக்கேற்ப நாம் சக மனிதர்களுடன் எவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பதையும் கண் கூடாக தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்களுடன் தகவல்களை சரியாகக் கூறவும், இடம், பொருளின் தன்மைக்கேற்றவாறு உரையாடவும் முடியும். அதனால் நாம் நல்ல தொடர்புகளை நிர்வகிக்கவும் முடியும்.

சுய மேலாண்மை: சுய மேலாண்மை என்பது ஒருவரின் வாழ்க்கையின் போக்கிற்கு ஏற்றவாறு, சொந்த நலனுக்காகவும், சொந்த வாழ்க்கையின் சிக்கலுக்காகவும் சரியான முடிவுகளை எடுத்து, அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தன்னைத் தானே மேலாண்மை செய்வார்கள். அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களின் வழியாக ஒரு இணக்கத்தை என்றும் நிதானமாக
சமூகத்திடம் பிரதிபலிப்பார்கள்.

சுயக்கட்டுபாடு : சுயவிழிப்புடன் இருப்பதால், உணர்ச்சி ரீதியாக எது நடந்தாலும், தங்களின் உணர்வுத் தன்மையுடன் சூழல்களை ஒழுங்குபடுத்தவும் மற்றும் தேவையில்லாததை கட்டுப்படுத்தவும் செய்யலாம். முயற்சி: அதிக உணர்ச்சி நுண்ணறிவு கொண்டவர்கள், அதிக உந்துதல் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களை மேலும் நெகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கச் செய்யும். கடினமான காலங்களில் கூட வாழ்க்கையை அனுபவிக்க வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். மேலும் அவர்கள் தங்களை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

இரக்கம்: இரக்கம் உள்ளவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அதே கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்கும் திறனுடையவர்கள். மேலும் இது ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையின் அடிப்படையில் உறவுகளை உருவாக்க அவர்களுக்கு உதவுகிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளை எளிதாக புரிந்து, அவர்களுக்கான ஆறுதலையும், ஆதரவையும் வழங்குவதில் சிறப்பானவர்கள்.

சமூகத் திறன்கள் : உணர்வுபூர்வமாக அறிவார்ந்த நபர்களின் சமூகத் திறன்கள், மற்றவர்களிடம் உண்மையான அக்கறையையும், மரியாதையையும்
காட்டுவார்கள்.

உறவு மேலாண்மை : உறவு மேலாண்மை என்பது வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் நிறுவனத்திற்கு அதன் இலக்குகளை அடைய உதவும். மற்றவர்களுடன் நேர்மறையான எண்ணங்களுடன் உரையாடுவார்கள். அதனால் திறமையான உறவு மேலாண்மையானது, விற்பனை அதிகரிப்பால், வாடிக்கையாளர் விசுவாசத்தை அதிகப்படுத்த முடியும் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை சரியாக்க முடியும்.

மேலே சொன்ன ஏழு கூறுகளையும் ஒவ்வொரு நிர்வாகமும் விரும்புகிறது. தங்களுடைய ஊழியர்களுக்கும் தேவையென்று தற்போது முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டது. அதனால் தான் தற்போது எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பயற்சி வகுப்புகள் அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!