கண்ணாமூச்சி காட்டும் தென்மேற்கு பருவமழை; 45 ஆயிரம் ஏக்கர் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்: மதுரை, திண்டுக்கல் பெரியாறு கால்வாய் பாசன விவசாயிகள் கவலை

மதுரை: தென் மேற்கு பருவமழை ஆரம்பிக்காததால், மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோக பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பெரியாறு, வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூன்1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி பணி நடந்தது. இந்தாண்டு, பெரியாறு அணையில் இருந்து, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாசன பகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி முதல், தினமும் 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 43 ஆயிரம் ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் என மொத்தம் 45 ஆயிர்த்து 50 ஏக்கருக்கு, முல்லைப்பெரியாறு பாசனத்தில், இருபோக ஆயக்கட்டு பகுதியான, பேரணை முதல் மதுரை கள்ளந்திரி மதகு வரை பாசன வசதி உள்ளது. இந்த பகுதிகளுக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைகை அணையில் சேமித்து, இங்கிருந்து திறக்கப்படும். பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விதிமுறைகள் உள்ளன. அதில் பெரியாறு, வைகை அணைகளில் 4 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மேல் இருந்தால், பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோக ஆயக்கட்டில் முதல் போகத்திற்கு ஜூன் முதல் வாரம் திறப்பது வழக்கம்.

தண்ணீர் குறைவாக இருந்தால் தண்ணீர் அதிகரிக்கும் வரை காத்திருந்து, அதிகபட்சமாக ஆகஸ்ட் 15க்குள் திறந்தால் தான் நெற்பயிர் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக இருக்கும். இன்று காலை 8 மணி நிலவரப்படி, பெரியாறு அணையில் 2,015 மில்லியன் கனஅடியும், வைகை அணையில் 2 ஆயிரத்து 133 மி.க.அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. விதிமுறைப்படி, பார்த்தால், இரு அணைகளின் மொத்தம் இருப்பு 4 ஆயிரத்து 148 மி.க.அடி ஆகும். நான்கு ஆயிரத்துக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால், பெரியாறு பாசனக் கால்வாயில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.

இதுதொடர்பாக நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆலோசனை நடத்தினர். தென்மேற்கு பருவமழை துவங்குவதில் காலதாமதம் ஆவதால், தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்து இல்லை. தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து, தண்ணீர் வரத்து அதிகாரித்தால், தண்ணீர் இருப்பை பொறுத்து திறக்கப்படும் ஆனால், தென்மேற்கு பருவமழை காலதாமதமாக கேரளா பகுதியில், கடந்த வாரம் துவங்கிய நிலையில், அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயலால், பருவமழை உருவாக மேலும் தாமதம் ஆனது. இதனால், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வைகை இருந்து குடிநீருக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாளாக தென்மேற்கு பருவமழை மீண்டும் துவங்கி, சாரலாக பெய்யத் துவங்கியுள்ளது. இதனால், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதியளவு மழை பெய்யாத காரணத்தால், இன்று காலை 33 கன அடி மட்டுமே அணைக்கு தண்ணீர் வரத்து இருந்தது. வைகை அணைக்கும் கடந்த ஒருவாரமாக தண்ணீர் வரத்து இல்லை. வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் 69 கன அடி மட்டும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வைகை அணையில் 51.95 அடி தண்ணீர் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பருவமழை பெய்தால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இருப்பை பொறுத்து, தண்ணீர் திறப்பது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க வாய்்பபு உள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்