தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னையில் வெப்பம் தணிந்தது

சென்னை: தென்மேற்கு பருவமழை வட தமிழக உள் மாவட்டங்களில் மிகத் தீவிரமாகவும், பிற தமிழக மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளதால், நேற்று அனேக இடங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று முழுவதும் லேசான மழையுடன் மேகமூட்டமாக காணப்பட்டதால் வெப்பம் தணிந்தது. இதையடுத்து, மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டிலும் நீடித்து வருகிறது. அதன் காரணமாக வட தமிழக உள் மாவட்டங்களில் மிகத் தீவிரமாகவும், பிற மாவட்டங்களில் தீவிரமாகவும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகரில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

நேற்று காலை முதல் சில இடங்களிலும் மழை பெய்தது. அத்துடன் சென்னை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் நேற்று வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை காணப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். மேலும், 5ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

 

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை