தென்மேற்கு பருவமழை தீவிரம்: வால்பாறையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வால்பாறையில் ஆறுகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சிற்றோடை மற்றும் காட்டாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பரம்பிக்குளம் பாசன திட்ட ஆறுகளில் முக்கிய ஆறுகளான சோலையாறு, கூழாங்கல் ஆறு, இஞ்சியாறு, பேரையாறு, கஜமுடியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகாரித்து காணப்படுகிறது.

இதன்காரணமாக பரம்பிக்குளம் பாசன திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 147 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக வால்பாறை சுற்று பகுதியில் கடும் மூடுபனி நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 88, லோயர் நீரார் 85, சோலையார் அணை 70, சின்னக்கல்லாரில் 147 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் வால்பாறையில் பெய்துவரும் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு