தென்மேற்கு பருவமழை தீவிரம் பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென் மேற்கு பருவ மழையால் பிஏபி திட்டத்திற்குட்பட்ட பரம்பிக்குளம், ஆழியார் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு தென் மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாரலுடன் மழை துவங்கியது.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பருவமழை பகல் மற்றும் இரவு என கன மழையாக பெய்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வால்பாறை, ஆழியார், பரம்பிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை பெய்து வருவதால் சிற்றருவி, நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகியுள்ளது.

மேலும், நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்ட அணைகளான பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் அணைகளுக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்தது. இதில், டாப்சிலிப் அடுத்த பரம்பிக்குளம் பகுதியில் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக மழைப்பதிவு அதிகமானது. இதனால், 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் நீர் நீர்மட்டம் 12 அடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி 17 அடியாக உயர்ந்திருந்தது. அதுபோல், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணைக்கு வினாடிக்கு கடந்த வாரத்தில் 50 கன அடியாக இருந்தது. தற்போது அணைக்கு தண்ணீர் வரத்து 500 கன அடியாக உள்ளது. தற்போது, நீர்மட்டம் 83அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் பிஏபி திட்டத்திற்குட்பட்ட பரம்பிக்குளம், ஆழியார் அணைகளுக்கு பல மாதத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பது, விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு