தென்மேற்கு பருவமழை தாமதம்; தடுப்பணைகளில் தண்ணீர் வற்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அவலம்: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள தடுப்பணைகளில், பருவமழை தாமதத்தால் தண்ணீர் வற்றி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே, பொதுமக்கள் பயன்பாட்டிற்கும்,விவசாய தேவைக்கும் தடுப்பணைகள் மற்றும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை தடுப்பணை மூலமாக சேமித்து, கோடை காலங்களில் பயன்படுத்தி வந்தனர்.மேலும், தண்ணீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து விசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இதில், பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள குக்கிராமங்களில் தடுப்பணைகள் மற்றும் குளங்கள் பல உள்ளன. ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளில் மழைக்காலத்தில் தண்ணீர் எப்போதும் நிறைந்திருக்கும். இதனால் விவசாயிகள் பெரிதும் பயன்பெற்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டில் பல மாதமாக மழையின்றி வெயிலின் தாக்கமே அதிகளவு இருந்துள்ளது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தடுப்பணை மற்றும் குளங்களில் தண்ணீர் மிகவும் குறைந்திருந்தது.

கோடை மழை போதிய அளவு இல்லாததுடன், இந்த மாதம் துவக்கத்தில் பெய்ய வேண்டிய பருவமழை தாமதத்தால்,சுமார் 90 சதவீத தடுப்பணைகள் தண்ணீரின்றி வறண்டுள்ளது. மேலும், பல குளங்களிலும் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. கிராமங்களில் உள்ள நீர்தேக்க பகுதிகளில் தண்ணீரின்றி வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனைமலை உள்ளிட்ட சில இடங்களில், ஆற்றோர பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது மட்டுமின்றி,கோடை மழையும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்வதால்,ஆண்டுதோறும் தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாமல் பொய்த்து போனது.

இதனால், தடுப்பணைகளில் போதியளவு தண்ணீரின்றி சேறும், சகதியுமாகவும், செடி கொடிகள் முளைத்து நீர்மட்டம் குறைந்தும் வருகிறது. கோடை காலத்தில் தடுப்பணைகளை தூர்வாரி ஆழப்படுத்தி வைத்திருந்தால், ஆண்டுதோறும் பெய்யும் மழையை கொண்டு கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க ஏதுவாக இருந்திருக்கும் என, கிராம பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு