தெற்கு ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சங்கத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேசன், 202 ஊழியர்கள் வழக்கையும் இந்த வழக்கையும் சேர்க்க தேவையில்லை.

பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால் அவர்களை நீக்கி விட்டு புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்கள் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் மீறியுள்ளது. எனவே, புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மறுநியமனம் வழங்கினால் அதன் மூலம் அவர்கள் எந்த உரிமையும் கோர முடியாது. இந்த இடைக்கால ஏற்பாடு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. மனுவுக்கு ரயில்வே நிர்வாகம் பதில் தர உத்தரவிட்டு, விசாரணையை பிப்.3வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்