ரயில் பயணிகளை அலைக்கழித்த விவகாரம் விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவு: பயணிகள் வரவேற்பு, வழக்கமான நடைமுறை என அதிகாரி தகவல்

சென்னை: ரயில் பயணிகளை அலைக்கழித்த விவகாரத்தில் விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக எழும்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் வழக்கமாக நிறுத்தப்படும். ஆனால், நேற்று முன்தினம் இரவு, ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர், ராமேசுவரத்துக்கு ஆய்வுக்கு செல்லவிருந்த சிறப்பு ரயில் 4வது நடைமேடையில் நிறுத்தப்பட்டதால், பாண்டியன் விரைவு ரயில் 5வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது.

இதனால், அந்த ரயிலில் பயணம் செய்ய வந்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் இங்குமங்குமாக அலைந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடைக்கு சென்றனர். இதில் எம்.பி வெங்கடேசனும் ஒருவர். இதுகுறித்து, மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக வெளியிட்ட அறிக்கையில்: ரயில் நிலைய கட்டுமானப் பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 9 நடைமேடைகள் உள்ளன. இதில், முதல் 3 நடைமேடைகள் குறைந்த நீளம் கொண்டவை. 4வது நடைமேடை மட்டுமே நீளம் கொண்டது. அத்துடன், பீக் ஹவர் நேரங்களில் நீண்ட தூர விரைவு ரயில்களை கையாள்வதற்கு 4வது நடைமேடை வசதியாக உள்ளது. எழும்பூருக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேரும் சோழன் விரைவு ரயில் தான் மீண்டும் பாண்டியன் விரைவு ரயிலாக இரவு 9.40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த ரயில் 5 வது நடைமேடையில் வந்து நின்றது. பாண்டியன் விரைவு ரயில் பல நாட்கள் 5வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் விரைவு ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரமே இருந்ததால் மீண்டும் நடைமேடை மாற்றி நிறுத்தினால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கருதி 5வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க நிர்வாக காரணம்தான். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி