4 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்தது காற்றாலை மின் உற்பத்தியில் தென் மாவட்டங்கள் சாதனை: வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு

நாட்டின் மின் தேவைக்கு இயற்கையாக கிடைக்கும் முக்கிய சாதனமாக காற்றாலைகள் உள்ளன. காற்றால் உந்தப்பட்டு மெகா மின்விசிறி போன்ற இறக்கைகள் காற்றில் சுழன்று காற்று விசை கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல் மூலம் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு காற்றாலை மின்சாரம் வழங்கப்படுகிறது. காற்று வீசும் நேரங்களில் மட்டுமே காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகிறது.

இதற்கான சாத்திய கூறுகள் இந்தியாவில் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை, குமரி, தென்காசி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் காற்றின் வேகம் நன்றாக இருப்பதால் இப்பகுதிகளில் காற்றாலைகள் அதிகளவில் நிறுவப்பட்டு அதன் பலன்கள் பெறப்படுகின்றன.

காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 2ம் இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் ஜெர்மனியும், இந்தியா 4வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சார அளவில் தமிழகத்தின் பங்கு 55 சதவீதம் வரை உள்ளது. தமிழ்நாட்டில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு கோடை சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மின் நுகர்வு 19 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கியது.

இந்த மின் தேவையை சமாளிக்க பல்வேறு வழிகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டாலும் காற்றாலை மூலம் சராசரியாக 20 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது. காற்று சீசனில் காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தியாகிறது.

சில நேரங்களில் அதிக அளவில் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் போது மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நாட்களும் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் உள்ளன. இதில் அதிகபட்ச 7 ஆயிரம் காற்றாலைகள் நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ளன. முப்பந்தல், ஆரால்வாய்மொழி போன்ற பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. இங்குள்ள பிரதான மற்றும் சிறிய கிராமச்சாலைகளில் பயணிக்கும் போது திரும்பிய பக்கம் எல்லாம் காற்றாலைகள் சுழன்று கொண்டிருப்பதை காணமுடியும்.

இந்தப்பகுதிகளில் அதிக காற்று வீசும் ஜூன் முதல் ஆகஸ்ட்டு மாதங்களில் காற்றாலை உற்பத்தி உச்சத்தை அடைகின்றன. மற்ற சாதாரண நாட்களிலும் காற்றாலைகள் இங்கு இரவு பகலாக சுழன்று மின்சாரத்தை தருகின்றன. இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் காற்று சீசன் தொடங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒரு நாள் காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 4 ஆயிரத்திற்கும் அதிகமான மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது.

* முப்பந்தல் காற்றாலைகள்
நெல்லை மாவட்ட எல்லை முடிந்து குமரி மாவட்ட எல்லை தொடங்கும் இடத்தில் ஒரு புறம் மலைகளுடன் இயற்கையாக காட்சி அளிக்கும் முப்பந்தல் பகுதியில் ஆயிரக்கணக்கான தனியார் காற்றாலைகள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி கேந்திரமாக இப்பகுதி உள்ளது. உலகிலேயே காற்றாலைகள் அமைப்பதற்கு சிறந்த இடமாக கலிபோர்னியாவுக்கு அடுத்த இடமாக நெல்லை, குமரி மாவட்ட எல்லைப்பகுதிகளை குறிப்பிடுகின்றனர்.

இங்கு மெகா சைஸ் காற்றாலைகளும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. உலக அளவில் 3வது பெரிய காற்றாலை மின் உற்பத்தி மையமாக உள்ள முப்பந்தல் பகுதியில் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ள காற்றாலைகள் உள்ளன. தனியார் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அரசால் குறிப்பிட்ட விலைக்கு பெறப்பட்டு மின் தேவைக்கு வழங்கப்படுகின்றன.

* காற்றாலை அமைக்க செலவு
நெல்லை, குமரி மாவட்ட எல்லை பகுதிகளில் பெருகிவரும் காற்றாலைகள் காரணமாக இப்பகுதி நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. 5 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவ அதிகபட்சம் 2 முதல் 5 கோடி ரூபாய் செலவாகிறது. தமிழகத்தில் காற்றாலை நிறுவன தேவையான வசதிகளை மாநில அரசு தொழில் முனைவோருக்கு செய்து தருகிறது. மேலும் உற்பத்தியாகும் மின்சாரத்தையும் அரசு குறிப்பிட்ட விலை கொடுத்து பெறுகிறது.

* அதிக காற்றாலை மின் உற்பத்தி பெறும் பகுதிகள்
இந்தியாவில் அதிக காற்றாலை மின் உற்பத்தி பெறும் பகுதிகளில் ஆயிரத்து 500 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெறும் முப்பந்தல் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஜெசிலாமர் காற்றாலை பண்ணை ஆயிரத்து 64 மெகாவாட் மின் உற்பத்தியுடன் 2ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா பர்மன்வேல் பண்ணையில் 528 மெகாவாட் மின்சாரமும், அதே மாநிலத்தில் டல் டால்கான் பண்ணையில் 270 மெகாவாட் மின்சாரமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* காற்றாலைகளுக்கு வரும் சோதனைகள்
காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் காற்று இல்லாத காலத்தில் மின்சாரம் கிடைப்பது கடினம். இதை பராமரிப்பதற்கான செலவு அதிகமாவதாக காற்றாலை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். காற்றாலை விசிறிகளில் பறவைகள் சிக்கி அடிபட்டு இறப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. காற்றாலைகள் அமைப்பதற்காக மூலப்பொருட்களை எடுத்து செல்வது சவாலானதாக மாறிவருகிறது.

* வெளிநாடுகளில் உள்ளது போல் கடலிலும் காற்றாலை மின் உற்பத்தி மையத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரம் தனுஷ்கோடி பகுதியில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடலிலும் நிரந்தரமாக காற்று வீசும் என்பதால் அங்கு 365 நாட்களும் காற்றாலை மூலம் மின்சாரம் பெறமுடியும். தமிழகம் மட்டுமின்றி குஜராத்திலும் கடலில் காற்றாலை அமைப்பதற்கான சூழல்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றால் மேலும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகும்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்