வரும் 30ம் தேதி முதல் ஆக.1ம் தேதி வரை தென் மாவட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

நெல்லை: திருச்சி பணிமனையில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரயில்கள் இம்மாத இறுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. திருச்சி பணிமனையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட் 1ம்தேதி வரை அவ்வழியாக செல்லும் வைகை, பல்லவன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி தென்மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

அதன்படி, வரும் 30ம்தேதியன்று சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், வரும் 31ம்தேதி விருத்தாச்சலம், கடலூர், திருவாரூர், காரைக்குடி வழியாகவும், ஆகஸ்ட் 1ம் தேதியன்று விருதாச்சலம், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும் இயக்கப்பட உள்ளது. நெல்லை வழியாக செல்லும் நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ்(16352) வரும் 30ம் தேதியன்று திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக மும்பை செல்கிறது. மாதா வைஷ்ணவி தேவி கட்ராவில் இருந்து நெல்லைக்கு வரும் எக்ஸ்பிரஸ் (எண்.16788) இன்று 27ம்தேதி மற்றும் 30ம்தேதிகளில் கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகிறது.

இதுபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக கச்சு குடா செல்லும் வாராந்திர ரயிலும் வரும் 29ம்தேதியன்று திருச்சி செல்லாமல், திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இதே ரயில் (எண்.16353) வரும் 30ம் தேதியன்று சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக நெல்லை, நாகர்கோவிலுக்கு வந்து சேரும். தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்.06011) வரும் 31ம்தேதியன்று திருச்சி செல்வதற்கு பதிலாக விருதாச்சலம், சேலம், கரூர் வழியாக இயக்கப்படும்.எனவே தென்மாவட்டங்களில் இருந்து திருச்சி சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் பயணிகள் 3 தினங்களும் ரயில்களின் வழித்தடங்களை அறிந்து பயணிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

செங்கோட்டை ரயிலுக்கும் மாற்றுப்பாதை
16847/16848 மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில்களும் வரும் 30,31 மற்றும் ஆகஸ்ட் 1ம்தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இம்மூன்று தினங்களும் அந்த ரயில் திருச்சி ரயில்நிலையம் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக திருப்பிவிடப்படுகிறது. இந்த ரயிலுக்கு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் ஆகிய ரயில் நிலையங்களில் மூன்று நாட்களிலும் நிறுத்தம் உண்டு. எனவே தென்காசி மாவட்டத்தில் இருந்து அப்பகுதிகளுக்கு செல்வோர் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் திருச்சி, மணப்பாறை பகுதிகளுக்கு செல்வோர் இந்த ரயிலில் ஏறி பயணிக்க முடியாது.

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு