தென்சென்னையில் தோல்வி கவர்னர் பதவியும் போச்சு அமைச்சர் கனவும் காலி… தவிக்கும் தமிழிசை

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை தழுவியதன் மூலம் அவர் வகித்து வந்த ஆளுநர் பதவியும் போனது, ஒன்றிய அமைச்சர் கனவும் சிதைந்து போய்விட்டதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்ட போது, தெலங்கானா ஆளுநராகவும், புதுவை துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் அப்போது திடீரென தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து டிவிட்டுக்கு மேல் டிவிட் கொடுத்தார். மிகவும் உயர் பதவியான ஆளுநர் பதவியை உதறி தள்ளியது, அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பேச்சுகள் எழுந்தது. அவரும் அதற்கேற்றவாறு தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கினார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானது. இதேபோன்று தான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, பாஜவுக்கு தென் மாநிலங்களில் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால், இதனை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என கடந்த முறை தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட்டார்.

ஆனால், அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவருக்கு ஆளுநர் பதவியை பாஜ தலைமை வழங்கி அழகுபார்த்தது. ஆளுநராக பரபரப்பாக வலம் வந்த அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியலில் குதித்தது மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. இதுபற்றி அவரது ஆதரவாளர்கள் கூறும்போது,‘ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் என்றும், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது’ என்றும் கூறினர்.

அவர்களின் பேச்சை நம்பி, தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் முழுமையாக நம்பி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வாரி சுருட்டியது. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றியை பெற்றதால் தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம், பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை தழுவினார். இந்த தோல்வியின் மூலம் தான் வகித்து வந்த ஆளுநர் பதவியையும் இழந்து விட்டார். அதேபோன்று வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அவரது கனவும் சிதைத்து போய்விட்டது.

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு

மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

சிவகங்கை அருகே இரட்டை கொலை