தென் ஆப்ரிக்காவுடன் இன்று கடைசி ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா

பார்ல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. ஜோகன்னஸ்பர்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தாயாசத்தில் மிக எளிதாக வென்றது. எபேஹாவில் நடந்த 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. அந்த போட்டியில் இந்தியா 46.2 ஓவரில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில் (சுதர்சன் 62, ராகுல் 56), தென் ஆப்ரிக்கா 42.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்தது. ஹெண்ட்ரிக்ஸ் 52, டோனி டி ஸோர்ஸி 119* (122 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), வாண்டெர் டுஸன் 36 ரன் விளாசினர்.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது. நடப்பு தொடரில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக 2 அரைசதம் விளாசி திறமையை நிரூபித்துள்ளார். சித்துவுக்கு பிறகு அறிமுகமான முதல் 2 போட்டியிலும் அரை சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். ருதுராஜ், திலக் வர்மா கணிசமாக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஆவேஷ், அக்சர், முகேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குல்தீப் சுழல் எடுபடாதது சற்று பின்னடைவு தான். தொடரை வெல்லும் முனைப்புடன் இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு