தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

சென்னை: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (115.1 ஓவர்). ஷபாலி 205, மந்தனா 149, ஜெமீமா 55, கேப்டன் ஹர்மன்பிரீத் 69, ரிச்சா 86 ரன் விளாசினர். கூடவே 80 பவுண்டரிகள் விளாசினர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு சுருண்டது (காப் 74, சுனே 65 ரன்). இந்திய பந்துவீச்சில் ஸ்னேஹ் ராணா 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தீப்தி 2 விக்கெட் எடுத்தார்.

பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா, 3வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்திருந்தது. சுனே லுவஸ் 109 ரன் விளாசி ஆட்டமிழந்தார். கை வசம் 8 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 105 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

கேப்டன் லாரா வுல்வார்ட் 93, மரிஸன்னே காப் 15 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். வுல்வார்ட் சதத்தை நிறைவு செய்ய, மரிஸன்னே 31 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த டெல்மி முதல் இன்னிங்சை போலவே 2வது இன்னிங்சிலும் ராணா சுழலில் மீண்டும் டக் அவுட் ஆனார். வுல்வார்ட் 122 ரன் (314 பந்து, 16 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப, உணவு இடைவேளையின்போது தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது.

சினலோ ஜாப்டா 9 ரன் எடுத்திருந்தபோது தசைப்பிடிப்பு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் ஓய்வில் சென்றார். இதையடுத்து நடின் டி கிளெர்க் – டெர்க்சன் இணை மிக நிதானமாக விளையாடி, இந்திய வீராங்கனைகளின் பொறுமையை சோதித்தது. ரன் எடுக்காவிட்டாலும், விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்திய இந்த ஜோடி ஆட்டத்தை டிராவை நோக்கி நகர்த்த முயற்சித்தது.

17 பந்துகள் தாக்குப்பிடித்த டெர்க்சன் 5 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த டுமி 6 ரன் எடுத்து ரன் அவுட்டானார். மீண்டும் களத்துக்கு திரும்பிய சினலோ கூடுதலாக 6 ரன் மட்டுமே சேர்த்து ராணா சுழலில் ஷுபா வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் பொறுமையாக விளையாடிய டி கிளெர்க் அரை சதம் அடித்தார். இதனால் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது தென் ஆப்ரிக்கா.

33 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன் எடுத்திருந்த மாசபடாவை போல்டாக்கினார் ஷபாலி. டி கிளெர்க் 61 ரன் (185 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ராஜேஸ்வரி பந்துவீச்சில் கிளீன் போல்டாக, தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 373 ரன் குவித்து ஆல் அவுட்டானது (154.4 ஓவர்). இந்தியா தரப்பில் ராணா, தீப்தி, ராஜேஸ்வரி தலா 2 விக்கெட், பூஜா, ஷபாலி, ஹர்மன்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 37 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 9.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷுபா சதீஷ் 13, ஷபாலி 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுமார் 40 நிமிட ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் அமர்க்களம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 3வது முறையாக டெஸ்ட் போட்டியில் மோதிய இந்தியா 3-0 என ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்ததுடன், 2வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. முதல் இன்னிங்சில் 77 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட், 2வது இன்னிங்சில் 111 ரன்னுக்கு 2 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட் கைப்பற்றிய ஸ்னேஹ் ராணா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்து டி20 சவால்
நடப்பு சுற்றுப்பயணத்தில், பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடிய ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்கா 0-3 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆன நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியிலும் மண்ணைக் கவ்வியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் ஜூலை 5, 7, 9 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்ட நிலையில், டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை ₹150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை