கட்டாய ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்த டி.எஸ்.சௌந்தரம் அம்மையார்

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர் விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர், சமூகச் சீர்திருத்தவாதி என்ற பன்முகத் தன்மையைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரப் பெண்மணி டி.எஸ். சௌந்தரம். இவர் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் சுந்தரம்-லட்சுமி அம்மாளுக்கு மகளாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று பிறந்தார். இவரின் தந்தையார் டி.வி.சுந்தரம் அய்யங்கார் தென்னிந்தியாவின் பிரபலமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் ஆவார். சௌந்தரம் திருக்குறுங்குடியில் உள்ள பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். முத்தையா பாகவதரிடம் வீணை இசை கற்றார். தமது 10வது வயதில் வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ச்சி பெற்றார். டி.எஸ்.சௌந்தரத்தின் 12ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஆனால் விரைவிலேயே அவர் விதவை ஆனார்.

1925ஆம் ஆண்டு கணவர் டாக்டர் சுந்தரராஜன் இறக்கும்போது, சௌந்தரம் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது. என்னைப் போலவே மருத்துவம் படித்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள் என அவரிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். கணவரின் வாக்குறுதியை நிறைவேற்றத் தனது தந்தையின் உதவியுடன் டெல்லிக்குச் சென்று மருத்துவம் படித்து 1936 இல் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1938இல் மதுரை அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணி வாய்ப்பு கிடைத்தும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கே சென்று பணியாற்றினார்.

கிராமப்பகுதிகளில் காங்கிரசு கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த காந்திஜி மூலம் ஹரிஜன இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜி. ராமச்சந்திரன் என்பவரைக் காதலித்து மகாத்மா காந்தியின் ஆசியுடன் நவம்பர் 7, 1940இல் மறுமணம் செய்து கொண்டார். மதுரையில் சொந்தமாக இலவச மருத்துவமனையை ஆரம்பித்தார். 1947ல் மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள சின்ளப்பட்டியில் ஒரு வீட்டில் இரண்டு படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக கஸ்தூரிபா மருத்துவமனையைத் தொடங்கினார் சௌந்தரம். டாக்டர் சௌந்தரத்தின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்த மருத்துவமனை கிராமப்புறச் சுகாதாரம் மற்றும் குடும்பநலனில் பல வழிகளை உருவாக்கியது. காந்தியடிகள் இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியாவின் பிரதிநிதியாக நியமித்தார்.

தனது கணவர் ஜி.ராமச்சந்திரனோடு இணைந்து 1956ம் ஆண்டு காந்தி கிராமப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தார். திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராமப் பல்கலைக்கழகமாக மாறியது. இந்தப் பல்கலைக்கழகம் மகாத்மாகாந்தியின் கல்வி மாதிரியான நை தாலிம் அல்லது அடிப்படைக் கல்வி என்பது அறிவும் வேலையும் தனித்தனியாக இல்லை என்ற மகாத்மாகாந்தி கொள்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.

1952ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1962ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார். அதன் பின் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் துணைக் கல்வி அமைச்சரானார். அப்போது நாடு முழுவதும் கட்டாய ஆரம்பக் கல்வியை அறிமுகம் செய்து இலவசமாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இவரது சமூகச் சேவையால் 1962ல் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
1967ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் இளம் மாணவர் தலைவர் என்.அன்புச்செழியனிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்விக்கு பின்பு அவர் மீண்டும் சமூகப் பணிக்குச் சென்று அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.

தேசிய சேவைத் திட்டத்தை நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) தொடங்கவும் அவர் உதவினார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். டி.எஸ்.சௌந்தரம் 1980 ஜனவரி 3ஆம் தேதி முதல் 1984 அக்டோபர் 21ஆம் தேதி வரை காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார். இந்திய அரசு 2005ஆம் ஆண்டு டி. எஸ் சௌந்தரம் அம்மையாருக்கு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்புச் செய்தது.

– ஏ. பி. முருகானந்தம்

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை