திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற சோனியா காந்தி, பிரியங்கா விமானத்தில் டெல்லி சென்றனர்: கனிமொழி எம்பி, கே.எஸ்.அழகிரி வழியனுப்பினர்

சென்னை: திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை நந்தனத்தில் நேற்று முன்தினம் மாலை, திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமை மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளின் முன்னணி பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து சோனியா காந்தி மற்றும் பிரியங்கா, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தங்கினர். தொடர்ந்து அவர்கள் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 6:55 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்பி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு