கை, கால்களை கட்டிப்போட்டு முகத்தில் டேப் சுற்றி மகன், மகளை கொன்றதை வீடியோ எடுத்த ஏட்டு மனைவி: கணவனுக்கு அனுப்பியதாக பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ்.

இவரது மனைவி சங்கீதா (34), மகன் ரோகித் (7), மகள் தர்ஷிகா  (5). கொண்டலாம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த சங்கீதா, இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏட்டு கோவிந்தராஜூக்கு, பெண் போலீஸ் ஒருவருடன் தவறான பழக்கம் இருந்ததாகவும், அதனை கண்டித்தும் கணவர் கேட்காததால் இரண்டு குழந்தைகளையும் கொன்று சங்கீதா தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு கோவிந்தராஜிடம் கேட்டபோது, அவருடன் நட்பாகத்தான் பேசினேன் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு விஷ மாத்திரையை கொடுத்த சங்கீதா, பின்னர் இருவரையும் தூக்கில் தொங்க விட்டு கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதனிடையே குழந்தைகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பான வீடியோ ஒன்றையும் எடுத்து சங்கீதா கணவருக்கு அனுப்பியதாக புது தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் குழந்தைகளுக்கு விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து கொடுத்துள்ளார். பிறகு குழந்தைகள் இருவரும் தப்பிச் செல்லாத வகையில் அவர்களது கை, கால்களை கட்டிப் போட்டு வாயை செல்லோ டேப் போட்டு ஒட்டி பின்னர் தூக்கில் தொங்க விட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த காட்சிகளை அவர் வீடியோவாக எடுத்து கணவருக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கீதாவின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருக்கு அனுப்பிய காட்சிகளை கோவிந்தராஜ் பார்க்காமல் வீட்டுக்கு அவசரமாக வந்துள்ளார். எனவே கோவிந்தராஜின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‘இரண்டு பேரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதில் என்னென்ன தகவல்கள் உள்ளது?, வீடியோக்கள் உள்ளனவா? அவை டெலிட் செய்யப்பட்டனவா? அப்படி செய்தால் அது யாரால் செய்யப்பட்டது என்பது பற்றி விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே இரண்டு செல்போன்களையும் சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதில் இருக்கும் வீடியோவை சங்கீதாவே எடுத்தாரா? அல்லது வேறு யாரேனும் எடுத்தனரா எனவும் விசாரிக்கப்படும் என்றனர். ஒருவேளை இந்த சம்பவம் தற்கொலை இல்லாமல் மூவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related posts

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!