தாயின் சாவிற்கு காரணமான துரித உணவக உரிமையாளரை கொல்ல முயன்ற மகன் கைது: நண்பரும் சிக்கினார்

திருவள்ளூர்: தன் தாயின் சாவிற்கு காரணமான துரித உணவக உரிமையாளரை கொலை செய்ய முயற்சி செய்த மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் என்பவரது மகன் ராஜன் (31). இவர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகன் பாபு (22) மற்றும் பெரம்பூரை சேர்ந்த ஹரி (19) ஆகிய இருவரும் சாப்பிட வந்துள்ளனர். அப்போது, சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது உரிமையாளரிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், துரித உணவகம் உரிமையாளர் ராஜன் வீண் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் பத்தியால் பேட்டை பாபு, பெரம்பூர் ஹரி மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் இந்த உணவகத்திற்கு திரும்பி வந்துள்ளனர். சாப்பிட்டு விட்டு கடையிலிருந்து வீட்டுக்கு கிளம்பும்போது திடீரென தாங்கள் மறைத்திருந்த கத்தியால் கொண்டு ராஜனை கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர். மேலும், கையில் வைத்திருந்த இரும்பு ராடால் பின்பக்க தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் ராஜன் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் விரைந்து வந்து ராஜனை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்தார். விசாரணையில், திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி பாத்திமாவுக்கும் துரித உணவு நடத்தி வரும் கடை உரிமையாளர் ராஜனுக்கும் கடந்த 2019ல் இருந்து கள்ளத் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் வீட்டில் தெரியவரவே பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் தாயின் சாவுக்கு காரணமான ராஜனை தீர்த்துக்கட்ட ஸ்டாலின் மகன் பாபு திட்டம் தீட்டியதாக தெரியவந்தது. இதனையடுத்து ஸ்டாலின் மகன் பாபுவை கைது செய்து போலீாசர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாபுவுக்கு ஆதரவாக சென்னை பெரம்பூரை சேர்ந்த ஹரி மற்றும் திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் சாலையை சேர்ந்த ராஜேஷ் மகன் பரத் (19), திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் கார்த்திக் ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, திருவள்ளூர் கற்குழாய் சாலையை சேர்ந்த ராஜேஷ் மகன் பரத் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடைய பெரம்பூர் ஹரி, திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் தலைமறைவானதால் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கால்நடை பண்ணை அமைக்க கடன் உதவி அளிக்க முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தரகம்பட்டி அருகே கூனமநாயக்கனூரில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா