சொக்க வைக்கும் சோமேஸ்வரர் ஆலயம்

ஆலயம்: சோமேஸ்வரர் ஆலயம், ஹலசூரு, பெங்களூரு மாநகரம், கர்நாடக மாநிலம்.
காலம்: கருவறை 11-12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர், விஜய நகர
மன்னர்கள் (14-15 ஆம் நூற்றாண்டு), கெம்பே கவுடா (16-ஆம் நூற்றாண்டு), மைசூரு உடையார்கள் (17-ஆம் நூற்றாண்டு) ஆட்சிக்காலத்தில் ஏராளமான மாற்றங்களும் மறுசீரமைப்புகளும் செய்யப்பட்டன.

இன்றைய நவீன பெங்களூரு மாநகரத்தில் உள்ள மிகப் பழமையான ஆலயங்களுள் ஒன்று ஹலசூரு சோமேஸ்வரர் ஆலயம். முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சியின் போது பொ.ஆ.1004 இல் – கங்கர்களைத் தோற்கடித்த சோழர்கள் இன்றைய பெங்களூரு பகுதிகளைக் கைப்பற்றினர். பின்னர் சோழர்கள், கங்கர்கள், ஹொய்சாளர்கள் இடையே நடைபெற்ற போர்களால் இப்பகுதியில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதாலும், மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலம் வரை இப்பகுதியில் சோழர் ஆதிக்கம் நீடித்தது.

இதனால், இவ்வாலயத்தின் கட்டுமான மேம்பாடுகளில் வெவ்வேறு ஆட்சியாளர்களின் காலத்தின் கலையம்ச வேறுபாடுகளைக் காணலாம்.(உதாரணம்: சோழர்காலக் கருவறையில் உள்ள கற்களின் தன்மை மற்றும் அளவு வேறுபாடுகள், பிற்காலத்தில் வெளி மண்டப கட்டுமானங்களில் உள்ள கற்கள்).கருவறை 11-12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறை வெளிச்சுற்றில் 63 நாயன்மார்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அருகிலேயே சமயக்குரவர் நால்வருக்கும் சிற்றாலயம் உள்ளது.

கருவறைகளின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிவன் – பார்வதி திருமணக்காட்சி, விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் மற்றும் முனிவர்களின் சிற்பங்கள், வெளிப்புறச்சுவர் களில் உள்ள சிவ வடிவங்கள், 48 தூண்கள் கொண்ட முகமண்டபத்தில் அழகிய புடைப்புச் சிற்பங்கள், கருவறை முன் மண்டபத்தின் நுழைவாயில் அருகே உள்ள ராவண அனுக்கிரஹ மூர்த்தி, அர்ஜூனன் – கிராதமூர்த்தி போர், மகிஷாசுரனை வதம் செய்யும் துர்க்கை சிற்பம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. காமாட்சி அம்மன் ஆலயம், அனுமன் சந்நதி ஆகியவை பிற்கால உடையார்களின் பங்களிப்பு. ஏராளமான நாகவடிவங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கும்.

மது ஜெகதீஷ்

Related posts

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்