தவிர்க்க வேண்டிய சில உணவு சேர்க்கைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நம்முடைய உடலை மேலும் சூடாக்குவதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், சில குறிப்பிட்ட உணவுகள் மற்ற உணவுகளோடு சேரும்போது நமது செரிமான அமைப்பை பாதிக்கின்றன. இதனால் மந்தமாக உணர்வோம். அதுமட்டுமின்றி தவறான சேர்க்கை உணவுகள் வயிறு உப்புசம் மற்றும் பல்வேறு செரிமானப் பிரச்னைகளை வரவழைக்கும். எனவே, கோடை காலத்தில் ஆரோக்கியமான செரிமானத்திற்கும் உடல் நலனுக்கும் கேடு விளைவிக்கும் சில உணவு சேர்க்கைகளை தவிர்ப்பது நல்லது. இது குறித்து தெரிந்து கொள்வோம்.

யோகர்ட் அல்லது சீஸ் போன்ற அதிக புரத சத்துள்ள உணவுகளோடு பழங்கள் சேர்த்து சாப்பிடுவது செரிமான அழுத்தங்களுக்கு காரணமாக அமையும். பழங்களில் இயற்கையாக சர்க்கரை உள்ளதால் இவை உடனடியாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் புரத உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கும். இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது வயிறு உப்புசம் மற்றும் அசௌகர்யம் ஏற்படுகிறது.

கோடை காலத்தில் அதிகமாக சாலடுகளை எடுத்துக்கொள்வது சாதாரண விஷயமே. இந்த சாலடின் மேல் கூடுதல் சுவைக்காக வினிகர் அல்லது சிட்ரஸ் பழ ஜூஸ்களை சேர்த்து சிலர் சாப்பிடுவர். ஆனால் இந்த அசிடிக் சேர்க்கை மாவுச்சத்து உணவுகளோடு சேரும் போது செரிமானத்தை வெகுவாக பாதிக்கிறது.கோடை காலம் வந்துவிட்டாலே தர்பூசணியின் வரத்தும் அதிகரித்துவிடும். நீர்ச்சத்து பண்புகள் மற்றும் புத்துணர்ச்சியான சுவை காரணமாக தர்பூசணியை தண்ணீர்ப்பழம் என்றும் கூறுவார்கள். எனினும் இதை பால் பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்புசம், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

வெப்பத்தை தணிக்க பலரும் அதிகளவு குளிர்பானம் அருந்துவது இயல்பே. ஆனால் சிலருக்கு சாப்பிடும் போது இடையிடையே குளிர்பானம் அருந்தும் பழக்கம் உண்டு. இவ்வாறு செய்வது, செரிமானத்தை பெரிதும் பாதிக்கும். வாழைப்பழம் போன்ற இனிப்பான பழங்களோடு ஆரஞ்சு, அன்னாசி போன்ற அசிடிக் பழங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமான அசௌகர்யத்தை உண்டாக்கும். கோடை காலத்தில் இந்தப் பழங்களை உண்ண வேண்டுமென்றால் புரதச்சத்து நிறைந்த பழங்களை தனியாகவும், இதேப்போன்ற அசிடிக் தன்மை நிறைந்த பழங்களை தனியாகவும் சாப்பிட்டால் எந்தப் பிரச்னையும் வராது.

தொகுப்பு: தவநிதி

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!