தனிமையும் கருணையும் தவமே…

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

தனிமையிலும் சாரம் இருக்குதம்மா… என்பது பாரதியின் மகத்தான வாக்கியம். வீட்டிலிருக்கும் நேரத்தை நீங்கள் உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னென்ன படிக்க வேண்டுமென்று திட்டமிருந்தீர்களோ அதையெல்லாம் திட்டமிட்டு படித்து விடுங்கள். ஏனெனில் நம்மிடம் இருக்கும் புத்தகங்களை இதுவரை நேரமின்மை காரணமாக அப்படியே வைத்துக் கொண்டிருப்போம். அல்லது படிக்க நேரமே இல்லை என்று அலட்டலாக சொல்லிக்கொண்டு சோம்பலாக இருந்திருப்போம்.

எனவே, உங்களின் அறிவின் ஆழத்தை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். எந்தெந்த இடத்தில் உங்களின் அறிவு மந்தமாக இருக்கின்றதோ அதையெல்லாம் அடையாளம் காணுங்கள். இன்னும் சொல்லப்போனால் உங்களை நீங்களே துலாக்கோல் முள்ளின் நடுவில் நிறுத்தி எதையெல்லாம் அறியவேண்டுமோ அவை எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் ஒரு வாசிப்பு உலகத்தை பிரமாண்டமாக்கிக் கொண்டு அதிலேயே தோய்ந்திருங்கள். இல்லையெனில் ரொம்ப போரடிக்குது… வெறுப்பா இருக்குது… என்று புலம்பியபடி மனப் புழுக்கத்திலேயே இருக்க நேரிடும்.

நீங்கள் ஏதேனும் மந்திர ஜபத்தை உபதேசமாக எடுத்திருந்தாலோ அல்லது ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாலோ குறைந்தது அரை மணிநேரம் மந்திர ஜபங்களில் ஈடுபடலாம். இன்னும் சொல்லப்போனால் உங்களை நீங்கள் உற்றுப்பார்த்து அவதானிக்கவும் இதுவொரு நல்ல சமயம். தனித்திருத்தலின் வாயிலாக உங்களின் உண்மையான சில குணங்களையும், பலம், பலவீனங்களையும் அறிந்து கொள்ளலாம். தனிமை மட்டுமல்ல கருணையும் ஒரு தவம்தான்.

அடிக்கடி நாம் காணும் காட்சிதான். ஆனால், சட்டென்று கடந்து சென்று விடுகின்றோம். நம்மில் சிலர் சட்டென்று உதவுகின்றோம். வேறொன்றுமில்லை. பேருந்துகளிலும், ரயில்களிலும், தெருக்களிலும், வரிசைகளிலும் முதியோர்கள் வந்து நிற்கும்போது அவர்களுக்குரிய இடத்தை அளிக்காது அவர்களை நிற்க வைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். பெரும்பாலும் பேருந்துகளிலும் ரயில்களிலும் வயதானவர்கள் அருகே நிற்கும்போதும் அவர்களால் ஒருக்கட்டம் வரையிலும் நிற்க முடியாமல் நெளியும்போதும் அருகிலுள்ளோர் துளிகூட இரக்கமற்று அப்படியே அமர்ந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

முக்கியமாக இளைஞர்களும், யுவதிகளும் கூட அப்படி இருப்பதை பார்க்கின்றோம். முதியோர்கள் மட்டுமல்ல… கர்ப்பிணிப் பெண்கள் நிற்கும்போதுகூட பெண்களே அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றார்கள். மரபுக்கும், கலாச்சாரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் பேர்போன நம்நாட்டில் இன்று வயதானவர்கள் பல இடங்களில் ஒதுக்கப் படுகிறார்கள். வீட்டிலிருந்து முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள். அவர்களின் பேச்சை கேட்க முடியாத பொறுமையின்மையோடு இருக்கின்றார்கள்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை