சோலார் பேனல்கள் அமைத்து தருவதாக ரூ.9 கோடி மோசடி: ஐதராபாத்தில் இருந்து மிரட்டிய தம்பதியை கைது செய்தது திருச்சி போலீஸ்

திருச்சி: திருச்சி அருகே சோலார் பேனல்கள் அமைத்து தருவதாக கூறி ரூ. 9 கோடி மோசடி செய்த தெலங்கானாவை சேர்ந்த 3 பேரை திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்தனர். சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், சூரிய மின்சக்தி தொழிற்சாலைகளின் பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமான வணிகத்தில் ஈடுபடுவது, சோலார் பேனல்களை நிறுவுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. இந்நிறுவனம் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மூவானூர் கிராம பகுதியில் சோலார் பேனல்களை அமைத்து வருகிறது. இதற்கு சோலார் பேனல்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கும் தனியார் நிறுவன உரிமையாளர் ஷிரிஷாபொலு (42). இவரது கணவர் பவன்குமார் (45) மற்றும் விற்பனை பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் சென்னை நிறுவனத்தின் இயக்குநரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது சென்னை மணலியில் உள்ள கிடங்குகளில் சோலார் பேனல்களை சேமித்து வைத்திருப்பதாகவும், இதன் ஒன்றின் விலை ரூ.15,450 என்றும் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய சென்னை தனியார் நிறுவன இயக்குநர், 5,580 சோலார் பேனல்கள் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார். இதையடுத்து, அவர்கள் சோலார் பேனல்களுக்கு ரூ.9,68,56,300 (ஜிஎஸ்டி சேர்த்து ) தொகை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
இதன்பின் சென்னை தனியார் நிறுவன இயக்குநர், தனது நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ஷிரிஷாபொலு வங்கி கணக்கிற்கு கடந்தாண்டு ஜூலை 8ம் தேதி ரூ.9,68,56,300 அனுப்பினார்.

ஆனால் சொன்னபடி அவர்கள் சோலார் பேனல்களை அனுப்பவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது பணத்தை தரமறுத்தும், தொலைபேசியில் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவனம் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஐதராபாத் சென்றனர். புதியநல்லகுண்டா பகுதியில் மறைந்திருந்த ஷிரிஷாபொலு, அவரது கணவர் பவன்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது