மென்பொருள் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மென்பொருள் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அருண் (39). இவர், தனது மனைவி நாகலட்சுமி, மகள்கள் மவுதிகா (11), தாஷ்விகா (4) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர், பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். கடந்த, 2 மாதங்களாக பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், ஆனால், அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டைவிட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அனைவரும் வெளியே செல்ல முடிவு செய்தனர். ஆனால், அருண் தான் வரவில்லை என்றும், தான் ஓய்வெடுக்க விரும்புவதாகவும் கூறியதையடுத்து அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிலர் ஒன்றாக பல இடங்களுக்கும், கோயிலுக்கும் சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் உள்ளே இருந்த படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் அருண் சடலமாக கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நாகலட்சுமி தனது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அருணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி