சமூகநலன் துறை சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம்: கலெக்டர் அருண்ராஜ் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், இந்தாண்டு சுதந்திரத் தினத்தின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் சிறந்த சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கு வரும் 26ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஆண்டுதோறும் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கு, சுதந்திர தின திருநாளில் தமிழக முதல்வரால் விருது வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகசேவகர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விருதுபெற விரும்பும் சமூகசேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, பெண்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், சமூகசேவை புரிந்துவரும் தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றதாகவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பான சேவை புரிந்துவரும் தொண்டு நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்விருதை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் தகுதியான தொண்டு நிறுவனங்கள், சமூகசேவகர்கள் http://awards.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேற்படி இணையதள வழியாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். இணையதளத்தில், விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு, மேற்படி சமூகசேவை விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சமூகசேவகர் இருப்பிடத்தின் அருகே உள்ள காவல் நிலையத்திலிருந்து பெற்ற ‘குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை’ என்பதற்கான சான்று, சேவை பற்றிய புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 செட் புக்லெட்டுகளில் தயாரித்து, வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், பி பிளாக், 4வது தளம், மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்