சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு பாஜவில் இணைகிறாரா காங். எம்எல்ஏ விஜயதரணி? எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கு என்கிறார்

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய போது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனுடன் மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்ற தனது எண்ணத்தை மேலிடத்துக்கு வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பை மேலிடம் வழங்கவில்லை. இதனால் அப்போது முதல் கட்சி தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்பி சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

அதற்கான அழுத்தத்தை மேலிடத்துக்கு கொடுத்து வந்தார். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜவில் இணைய போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இதுபற்றி விஜயதரணி எம்எல்ஏவிடம் கேட்ட போது, ‘‘எனக்கும் இந்த தகவல் வந்தது. பாஜவில் இணையப் போவதாக பேசப்படுவது எனக்கே ஆச்சரியமாகத் தான் உள்ளது’’ என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார். பாஜவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்வியை அவர் ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இதனால் விஜயதரணி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

Related posts

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை