சமூகநீதி, சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைக்க போராட்ட பயணம்; இறுதி இலக்கை எட்டும் வரை தொடர்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சமூக சீர்திருத்த-புரட்சியாளர்கள் காட்டிய வழியில் சமூகநீதி-சமத்துவ- சமதர்ம சமுதாயம் அமைக்க நாம் நமது போராட்டப் பயணத்தை இறுதி இலக்கை எட்டும் வரை தொடர்வோம் என்ற உறுதிமொழியை வைக்கம் நூற்றாண்டு விழாவில் எடுத்துக் கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெறவிருந்த “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டது. இவ்விழாவிற்காக நேற்று வந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர். அப்போது வைக்கம் போராட்டத்தின் “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலர்” “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” ஆகிய நூல்களை வெளியிட்டனர். இந்நிகழ்வில் திக தலைவர் வீரமணி மற்றும் அமைச்சர்கள், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றவிருந்த உரை வருமாறு: கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு – மாபெரும் நினைவகம் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மேற்பார்வையில் அது கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அப்பணிகள் முடிவடையும். அதனைத் திறந்து வைப்பதற்கு நானும் கேரளம் செல்ல இருக்கிறேன். தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன் முதலாகச் சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குத்தி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நான் அறிவித்து இருந்தேன். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கேரளா சென்று அந்த இடத்தை பார்வையிட்டு வந்துள்ளார். அதனை முறைப்படி கேரள அரசிடம் இருந்து பெற்றுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்றுத் தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ இதழ் மூலம் கொண்டு வரப்படும் என்று அப்போது அறிவித்து இருந்தேன். அத்தகைய சிறப்பு மலர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மலருக்கு என்ன சிறப்பு என்றால் இது மூன்று மொழிக் கட்டுரைகளைத் தாங்கியதாக அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. அன்று பெரியாரையும் வைக்கம் போராட்ட வீரர்களையும் கைது செய்தது திருவிதாங்கூர் அரசு. ஆனால் இன்று வைக்கம் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசும் – கேரள மாநில அரசும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு மாநில முதல்வர்கள் இங்கே இருந்து கொண்டாடுகிறோம்.

இதுதான் வைக்கம் உரிமைப் போராட்டத்தின் வெற்றியாகும். 100 ஆண்டுகளில் கிடைத்த மாபெரும் மாற்றம் இது. தமிழ்நாட்டில் திமுக அரசும் – கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் – கொள்கை சார்ந்த அரசாக இருப்பதால் இதனை நாம் கொண்டாடுகிறோம். ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையை ஒடுக்கப்பட்டோரே போராடிப் பெற்றாக வேண்டும். பிரசாரத்தின் மூலமாக மன மாற்றம் செய்வதும், போராட்டங்களின் மூலமாக வலியுறுத்துவதும், சட்டங்களின் மூலமாகக் கட்டாயப்படுத்துவதுமான மும்முனைத் தாக்குதலை நடத்தியாக வேண்டும். தீண்டாமைக்கு எதிராக, சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக – உயர்வு தாழ்வுச் சிந்தனைக்கு எதிராக – நாம் போராடியாக வேண்டும். அது மட்டுமல்ல ஆண், பெண் பாகுபாடு களையப்பட வேண்டும். ஆணாதிக்கச் சிந்தனையும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தடுக்கப்பட வேண்டும்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற முற்போக்குச் சிந்தனைகள் அனைத்துமே, அனைத்து ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டவைதான். இத்தகைய சமூக சீர்திருத்த, புரட்சியாளர்கள் காட்டிய வழியில் சமூகநீதி, சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைக்க நாம் நமது போராட்டப் பயணத்தை இறுதி இலக்கை எட்டும் வரை தொடர்வோம் என்ற உறுதிமொழியை வைக்கம் நூற்றாண்டு விழாவில் எடுத்துக் கொள்வோம். தந்தை பெரியார் மறைந்த போது, கலைஞர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்டார், நாம் தொடர்வோம் ‘ என்று குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப் பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம், தொடர்வோம். இவ்வாறு முதல்வர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு