சமூக நீதி, சமத்துவத்திற்காக பாடுபட்டவர் ஏழைகளுக்காக உழைத்ததே கலைஞரின் புகழுக்கு காரணம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாழ்த்து உரை

திருவாரூர்: ஏழைகளுக்காக உழைத்ததே கலைஞரின் புகழுக்கு காரணம் என்று பீகார் முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். திருவாரூர் காட்டூரில் நேற்று நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில், உடல்நலக்குறைவு காரணத்தால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து விழாவில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வாழ்த்துரையை திருச்சி எம்பி சிவா வாசித்தார். அந்த வாழ்த்துரையில், ‘கலைஞருக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியையும், அஞ்சலியையும் நான் செலுத்துகிறேன்.

கலைஞர் தன் 14வது வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து அதற்கு பின் 80 ஆண்டுகள் தீவிர, முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு மேலாக திமுக தலைவராக 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது இந்த நாட்டில் எந்த தேசிய கட்சி தலைவருக்கும், மாநில கட்சி தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பேறு. கலைஞர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் அரும்பாடுபட்டவர், ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்காகவும்.

பெண்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவும், பாடுபட்டவர். ஏழைகளுக்காக உழைத்ததே அவருடைய புகழுக்கு காரணம். கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் அவர் என்றென்றும் நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார். நான் அவரை கடைசியாக சந்தித்தது 2017ம் ஆண்டு அவருடைய பிறந்த நாள் விழாவில் தான். கலைஞர் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, 1991 ம் ஆண்டு திமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், நான் ஜனதாதளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன்.

திமுகவிற்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும்போதெல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் உறுப்பினராக நான் செயல்பட்டிருக்கிறேன். 2018ல் கலைஞர் மறைந்தபோது அஞ்சலி செலுத்த வந்தபோது, மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று உறுதிபட தெரிவித்துவிட்டு சென்றேன். எனது விருப்பம் நிறைவேறி நீங்கள் முதல்வராக பொறுப்பேற்று மாநிலத்திற்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகிறீர்கள். ஜூன் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் உங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த ஒற்றுமை நாங்கள் எண்ணுவதுபோல் ஈடேறினால், எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அகற்றப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக வலிமைபெறும், உறுதி பெறும், கலைஞரின் கொள்கையை தொடந்து கொண்டு சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு