சமூக வலைதளங்கள் மூலம் ஐடி ஊழியர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை: உணவு டெலிவரி ஊழியர் கைது

திருமலை: ஐடி ஊழியர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி, மாதப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. குறிப்பாக ஐடி ஊழியர்களை குறி வைத்து இந்த சம்பவம் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். நேற்று ஹைடெக்சிட்டி பகுதியில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு போதை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்றனர். அப்போது உணவு சப்ளை செய்யும் ஊழியர் போல் இருந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஷேக்பிலால் (33), என்பதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், போதைப் பொருள் விற்பனைக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. சிறையில் இருந்து வெளியே அவர், உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

உணவு சப்ளை செய்வதுபோல் நடித்து ஐடி ஊழியர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதனால் 50க்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஸ்னாப்ஷாட், டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு போதை மாத்திரை, கஞ்சாவை விற்பனை செய்துள்ளார். இதேபோல் நேற்றும் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ேஷக்பிலாலை கைது செய்து அவரது பையில் வைத்திருந்த 15 கிராம் போதைப்பொருள், 22 கிலோ கஞ்சா, 71 போதை மாத்திரைகள் மற்றும் அரை கிலோ கஞ்சா ஆயில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு