சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆகும் ஸ்பைடர்மேன் பிரியாணி!

ஸ்பைடர் மேன் என்றால் எதிரிகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றுபவர் என்ற சித்திரம்தான் நம் மனதுக்குள் தோன்றும். இப்போது ஸ்பைடர்மேன் என்றால் பிரியாணி என்ற ஒரு ட்ரெண்டிங் வெர்ஷன் உருவாகி வருகிறது. மும்பையைச் சேர்ந்த ஹீனா கௌஷர் ராத், இன்ஸ்டாகிராமில் ரொம்பவே பேமஸ். பேக்கரி உரிமையாளரான இவர், தனது சோஷியல் மீடியாவில் புதிதாகவும், அதே சமயம் எங்குமே கிடைக்கப்பெறாத உணவுகளையும் தயார் செய்து வீடியோவாக பதிவிடுவார். இவரது வீடியோக்கள் பல சமயங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கின்றன. பலரும் அறிந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர், இன்ஸ்டா பயோவில் தன்னை பேக்கரி உரிமையாளர் என்றே அறிமுகப்படுத்தி வருகிறார்.

இப்போது, அதுவல்ல நியூஸ். வழக்கம்போல இவர் புதிதாக சமைக்கப்போகிறேன் என்ற பெயரில் ஸ்பைடர்மேன் பிரியாணி என்று ஒரு பிரியாணியை நீல நிறத்தில் தயார்செய்து, அந்த பிரியாணியின் மேல் ஒரு விசேஷ லோகோவையும் சேர்த்திருக்கிறார். அதாவது, ஸ்பைடர்மேனின் கையில் எப்போதும் வலை இருப்பதுபோல இவரது பிரியாணியிலும் நீலக்கலரில் வலை ஒன்றை வடிவமைத்து இருக்கிறார். இந்த பிரியாணியைத் தயார் செய்வதற்கு எந்த விதமான மசாலாவோ அல்லது நீல நிறத்திற்காக கூட ஏதேனும் வண்ணங்களையோ அவர் பயன்படுத்தவில்லையாம். பிரியாணியின் நீல நிறத்திற்கு அவர் பயன்படுத்தியது சங்குப்பூவைத்தான். ஆம், இந்த பூவில் பல நாடுகளில் தேநீர் தயாரிப்பார்கள். ஆனால், ஹீனாவோ இந்தப்பூவை வைத்து நீலக்கலரில் பிரியாணி தயார் செய்து அந்த பிரியாணிக்கு ஸ்பைடர்மேன் பிரியாணி என்று பெயர் வைத்திருக்கிறார்.

அவர் எதிர்பார்த்த அளவு இந்த பிரியாணி வீடியோ உலகெங்கும் வைரல் ஆகவில்லை என்றாலும், இப்போது வரை 22 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. தனது பேக்கரி மாணவர்களுக்கு புதுவிதமான உணவை எப்படியெல்லாம் தயாரிக்க முடியும் என்று ஒரு பாடத்திற்காக இந்த பிரியாணியைத் தயார் செய்தேன் எனக்கூறும், ஹீனாவின் வீடியோவுக்கு எதிர்வினையாக கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பலர் அந்த பிரியாணியை எதிர்க்கவும் செய்கிறார்கள். நீங்கள் ஏன் பிரியாணியை அவமரியாதை செய்கிறீர்கள் என்றும், உங்களது தொடர் கண்டுபிடிப்பு ஒரு விதமான சலிப்பை அளிக்கிறது என்றும் நெகட்டிவ் போஸ்ட் போடுகிறார்கள். இன்னும் சிலர், உணவை மதிக்காத இவரை கைது செய்ய வேண்டும் என்று முஷ்டியை உயர்த்துகிறார்கள். இன்னும் சிலர் இந்த மாதிரியான புதுப்புது உணவுகளை வரவேற்கும் விதமாக பாஸிட்டிவான கருத்துகளையும் அள்ளி வழங்குகிறார்கள்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்