சமூக வலைத்தளம் மூலம் பழகி ஹரியானா பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து ரூ.35 லட்சம் பறிப்பு

*குமுளியை சேர்ந்த 2 பேர் கைது

கூடலூர் : ஹரியானா பெண்ணிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.35 லட்சம் பறித்த குமுளியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியான குமுளியை சேர்ந்தவர் மேத்யூ ஜோஸ் (36). கட்டப்பனையில் கடை வைத்துள்ளார். இவர் சமூக வலைத்தளம் மூலம் ஹரியானாவைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இருவரும் நெருக்கமாக, அப்பெண்ணை குமுளிக்கு வரச் செய்துள்ளார். பின் குமுளியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவரை ஆபாசமான முறையில் படங்களை எடுத்துள்ளார். பின் அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பலமுறை அந்தப் பெண்ணிடம் பணம், நகை என ரூ.35 லட்சம் வரை பறித்துள்ளார். இதற்கு, இவரது கடையில் வேலை செய்யும் குமளி செங்கரையை சேர்ந்த சாகிர் மோன் (24) உதவியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் குமுளி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து மேத்யூ ஜோஸ், சாகிர் மோன் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். குமுளி இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து, இறுதியில் டெல்லியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து குமுளி அழைத்து வந்தனர். நேற்று மேத்யூ ஜோஸ், சாகிர் மோன் ஆகிய இருவரையும் பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.மேத்யூ ஜோஸ் சமூக வலைத்தளங்கள் மூலம் திருமணமான பெண்களைக் குறி வைத்து, இந்த மோசடியை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது