100% ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்தான் எங்கள் குறிக்கோள் : பிஸினஸில் கலக்கும் தோழிகள்!

நாம் உண்ணும் உணவே இன்று விஷமாகிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியம் என நினைத்து நாம் உண்ணும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமான உணவாகத்தான் இருக்கின்றனவா என்னும் கேள்வி இப்போதெல்லாம் அதிகமாகவே கேட்க துவங்கியிருக்கிறது. இதில் மிகச்சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு என பல பிரச்சினைகளுக்கு நீண்ட காலங்கள் மருந்து சாப்பிடும் அளவிற்கு இன்றைய தலைமுறை ஆபத்தான வாழ்க்கை முறையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு இளைஞர்களே முடிவெடுத்தால் மட்டுமே சிறப்பான தீர்வு கிடைக்கும் அதன் பொருட்டு முதற்கட்டமாக தங்களால் முடிந்த நல்ல துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் ஸ்ரீசந்தனா மற்றும் காவ்யா. இளம்பெண் தொழில் முனைவோர்களான இவ்விருவரும் 100% ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் என்னும் குறிக்கோளுடன் குழந்தைகளுக்கு பிடித்த அதே சமயம் பெரியவர்களும் உண்ணக் கூடிய வகையில் பல ஆரோக்கியமான தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். என்னென்ன ஸ்னாக்ஸ் இவர்களிடம் சிறப்பாக விற்பனையாகிறது எங்கே இந்த ஐடியா உருவானது விவரமாக பேசத் துவங்கினார்கள் ஸ்ரீசந்தனா மற்றும் காவ்யா.

‘எங்களுடைய குழந்தைகளுக்காக தான் நாங்க இந்த ஸ்னாக்ஸ் செய்ய ஆரம்பிச்சோம். நம்ம அம்மா பாட்டி இவங்க எல்லாம் வீட்டில் இருக்கும்போது சாலட் , கொழுக்கட்டை , புட்டு, முறுக்கு, பலகாரங்கள் இப்படி எல்லாம் வீட்டிலேயே நிறைய செய்து கொடுப்பாங்க. ஆனால் இன்னைக்கு ஒன்றும் செய்யத் தெரியலை, அல்லது செய்யணும் என்கிற எண்ணம் இருந்தாலும் கூட எல்லோருமே வேலைக்கு செல்லும் பெண்களா இருக்கோம் அதனால் நேரம் சரியாக அமையறதில்லை. ஒருவேளை கடைகளில் இருக்கும் ஸ்னாக்ஸ்களை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால் , இதை கொடுக்காதீர்கள் உடலுக்கு கெடுதி என ஸ்கூலிலும் வேண்டாம் என சொல்லவும் என்ன செய்வது என்கிற எண்ணம்தான் எங்களை இப்படி ஒரு ஆர்கானிக் ஸ்னாக்ஸ் விற்பனை செய்யும் தொழிலை உருவாக்கும் அளவிற்கு மாற்றியது’ என ஸ்ரீசந்தனா பேசிக் கொண்டிருக்க இந்த ஸ்னாக்ஸ் வகைகளை எப்படிச் செய்ய துவங்கினார்கள்? எப்படி இந்த ஐடியா தொழிலாக உருவானது என மேலும் விவரித்தார் காவ்யா.

‘ நேரம் கிடைக்கும்போது நாங்க ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து ஸ்கூலுக்கு கொடுக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் நண்பர்கள், நண்பர்களின் குழந்தைகள் , சொந்தக்காரங்கதான் செய்து வாங்கினாங்க. பிறகு வாய் வார்த்தைகள்லயே நிறைய பேர் கிட்ட பரவி, அவர்களும் கேட்க ஆரம்பிச்சு நாங்க இதை ஏன் பிஸினஸா ஆரம்பிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. எல்லாமே காற்று வறுவல் (Air Fry) கான்செப்ட்தான். ‘ ஆயிலைக் குறைத்தாலே ஆயுள் நீடிக்கும் ‘என்பார்கள். அதற்கேற்ப வறுவல் ஸ்னாக்ஸ்களை எல்லாம் வெப்பத்தில் சுட்டெடுக்கும் முறையில் செய்யத் துவங்கினோம். போலவே சுவைக்காக நாம் பல ஸ்னாக்ஸ்களில் தோல், காம்பு என வெட்டி வீசிடுவோம். அதை செய்யக் கூடாது என்கிறதில் தெளிவா இருந்தோம். குறிப்பாக வெண்டைக்காயில் அதன் மேலே இருக்கும் கிரீடம் மாதிரியான காம்புப் பகுதியில்தான் ஊட்டச்சத்து அதிகம். ஆனால் சமைக்கும் போது அதை எடுத்திடுவோம். எங்களுடைய வெண்டைக்காய் ஸ்னாக்ஸ் காம்புடன்தான் இருக்கும்‘ என்னென்ன வகைகளில் ஸ்னாக்ஸ்கள் உள்ளன? தொடர்ந்தார் ஸ்ரீசந்தனா.

“ சிப்ஸ், வறுவல் இப்படி சாப்பிட்டாலும் கடைகளில் விற்கும் பாக்கெட் வகையறாக்களா இல்லாம சோளம், கேழ்வரகு, இப்படியான தானியங்களில் காற்று வறுவல்கள், அதில் தூவப்பட்ட சீஸ் மிளகாய் பொடி, மேலும் எங்க கிட்ட ஸ்பெஷலே பழங்களில் செய்யப்பட்ட வறுவல்கள்தான். பலாப்பழ வறுவல், பீட்ரூட் சிப்ஸ், இப்படி காய்கறி, பழங்கள் ஸ்னாக்ஸ் கூட எங்க கிட்ட இருக்கு. எந்தக் ஃபுட் கலரோ அல்லது, எண்னெணயோ இல்லாம சுத்தமான முறையிலே செய்கிறோம். மேலே இருக்கும் தோலில்கூட சத்துக்கள் இருக்கும் என்கிறதால், எந்த அளவுக்கு சுத்தம் செய்ய முடியுமோ செய்து அதை தோல், காம்பு உட்பட தான் ஸ்னாக்ஸ்களா மாத்திக் கொடுக்கறோம்‘ தங்களின் பின்னணி என்ன? பேசத் துவங்கினார் காவ்யா.

‘ நாங்க இருவருமே சின்ன வயதில் இருந்து குடும்ப நண்பர்கள்தான். இருவருமே சொந்தமாக ஒரு சிறு பிஸினஸ் தனித்தனியாக நடத்திட்டு வர்றோம். இதற்கிடையில் ரெண்டு பேரும் சேர்ந்து துவங்கின பிஸினஸ்தான் இந்த ஆர்கானிக் ஸ்னாக்ஸ் பிஸினஸ். தனியாக இதற்கென ஒரு பிராண்ட் உட்பட உருவாக்கி பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கோம். ஸ்ரீசந்தனாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா, திருமணத்திற்கு பிறகு இங்கே சென்னையில் செட்டிலானாங்க. ஃபைனான்ஸ் படிப்பு முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியிலே வேலை செய்திட்டு இருக்காங்க. நான் இங்கிலாந்தில் சைபர் செக்யூரிட்டி படிச்சிட்டு இருந்தேன், கொரோனா காரணமா இந்தியாவுக்குத் திரும்பினேன். வந்தவுடன் ஒரு சின்ன பிஸினஸ் ஆரம்பிச்சு செய்திட்டு இருந்தேன். கோவைதான் எனக்கு சொந்த ஊர், நானும் திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டிலாகிட்டேன். எங்களுடைய குழந்தைகளுக்காக நானும் ஸ்ரீயும் சேர்ந்து பேசத் துவங்கி செய்ய ஆரம்பிச்சோம். இதோ இன்னைக்கு ஒரு புது ஃபுட் பிராண்டா உருவாக்கியிருக்கோம்‘ என்னும் இருவருமே 30 வயதுக்கு கீழே வயதுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ ஒருவேளை நாங்க இருவருமே ஒரே வயது என்கிறதால் எண்ணங்கள் சரியா பொருந்திடுச்சு. மேலும் இன்னைக்கு நாம தினம் தினம் சாப்பிடுகிற உணவே பாதி ஹைபிரிட், கலப்படம், பூச்சிக் கொல்லி இப்படி கலந்துதான் வருது. சரி அந்த அளவுக்கு நாம இறங்கி பிரச்னையை சரிசெய்ய முடியாது. ஆனால் குறைந்த பட்சம் குழந்தைகள் ஸ்னாக்ஸ்ல மாற்றம் கொண்டு வருவோமே என யோசிச்சோம். இப்போதே நேரடியா விவசாயிகள் கிட்ட இருந்துதான் எங்களுக்கான மூலப் பொருட்கள் எல்லாம் வாங்குறோம். இதை எதிர்காலத்தில் நாங்களே ஒரு ஃபார்ம் அமைச்சு அதிலே பயிரிட்டு அடிப்படையிலேயே 100% ஆர்கானிக் ஸ்னாக்ஸ் கொடுக்கணும் என்கிற குறிக்கோளுடன்தான் பயணிக்கிறோம். காரணம் இது குழந்தைகள் விஷயம் சதாரணமாக எடுத்துக்க முடியாது. பொறுப்புடன் சொல்கிறார்கள் இந்த இளம் பிஸினஸ் தோழிகள் ஸ்ரீசந்தனா மற்றும் காவ்யா.
– ஷாலினி நியூட்டன்

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்