சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் எதிரொலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை..!!

சென்னை: சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சரை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மின்பளுவை குறைத்துக் கொள்ளவும் தேவைப்படும்போது உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படும். சூரியஒளி சக்தி மேற்கூரை மூலம் மின்னுற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கக் கோரி சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. தொழில்துறையினருக்கான மின்கட்டண உயர்வு, நிலை கட்டணம் உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளன. போராட்டத்தால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. 165 சிறு, குறு நிறுவனங்கள் இன்றைய கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார். தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு நல்ல அறிவிப்பு வெளிவரும் என சிறு, குறு, தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்