சின்ன சின்ன ஆசை! சிறகடிக்க ஆசை!

கோடைக்காலம் வரப்போகிறது, உடனே கிளம்புங்கள் ஒரு சுற்றுலாவிற்கு. நம் மனதும் உடலும் ஒரு சேரப் புத்துணர்ச்சியில் மலர்ந்து மணம் பெற, மனங்களின் அழுத்தங்களிலிருந்து நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ள ஒரு சுற்றுலா போதுமே!! நமது தினசரி வாழ்க்கைமுறையில் பல்வேறு கடமைகள் பொறுப்புக்கள் நம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கும். அதனால் ஏற்படும் மன அழுத்தச் சிக்கல்களிடமிருந்து விடுதலைபெற நமக்கு ஒரு சுற்றுலா போதுமானது. அன்றாட வழக்கங்களிலிருந்து ஒரு சின்ன மாற்றம் அவசியம். அது அடுத்து வரும் நாட்களில் நம்மைப் புத்தம்புதிய மனிதராய் இயங்க வைக்கும். அவ்வப்போது நாம் செல்லும் ஒரு சிறு பயணம் நம்மை வெகுவாகப் புத்துணர்ச்சி அடைய வைக்கும். அதிலும் பல பெண்கள் வீட்டுப் பொறுப்புகள், அலுவலகப் பொறுப்புகள் என சக்கரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். போதாதற்கு கோடை விடுமுறை வேறு வரவிருக்கிறது விருந்தினர்கள் வருகை, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கான பராமரிப்பு என ஓவர் டைமாகவே செல்லும் பட்சத்தில் வருடத்திற்குஒருமுறை நிச்சயம் ஒரு சின்ன இடைவேளை தேவை.

பயணம் அருகிலா தூரத்திலா என்பதெல்லாம் நமது வருமானத்தையும் வசதியையும் பொறுத்தது. ஆனால் பயணம் செய்வது என்பது மட்டுமே மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக பெண்களுக்கென அதிகபட்ச கடமைகள், சுமைகள் என அன்றாடம் மனதைப் பதம்பார்க்கும் நிகழ்வுகள் அதிகம். அதிலிருந்து ஒரு மாற்றமும் ஒரு தற்காலிக விடுதலையும் கொஞ்சம் அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்பது தானே நிஜம்.பயணம் என்பது செலவல்ல.. ஒரு ஆகச்சிறந்த முதலீடு…அது அலைச்சல் அல்ல ஒரு ஆசுவாசம். பயணத்தை தொடர்ந்து வரும் அடுத்த அடுத்த நாட்களை நாம் மனச்சிக்கலின்றி மகிழ்ச்சியுடன் நமது வாழ்க்கையை நகர்த்திச் செல்ல பெரிதும் பயன்படும் கண்ணுக்கு தெரியாத ஒரு முதலீடே.பயணம் என்பது சுற்றுலாவாகவோ பேருலாவாகவோ இருக்கலாம். குடும்பத்துடன் செல்லும் சுற்றுலாக்கள் குடும்ப உறவைப் பலப்படுத்தும் ஒருவகை எனில், நண்பர்கள் சூழச் செல்லும் சுற்றுலா மகிழ்ச்சியை பன்மடங்காக்கும் மற்றொரு வகை. தனிப்பயணங்கள் இன்னமும் இனிமையானவை. ஒரு பயணமூட்டையை தோளில் சுமந்து கால்போன போக்கில் நாடோடியாய் சுற்றி வருவதென்பது எவ்வளவு சுகமான பேரனுபவம் தெரியுமா? அத்தகைய பயணங்களை அனுபவித்தவர்களுக்கே அது புரியும் அந்த பேரானந்தம். வாழ்வினில் ஒரு முறையாவது தனிப் பயணம் சென்று வாருங்கள். அது உங்களை உங்களுக்கே புரிய வைக்கும். சுற்றுலா செல்வது என்பது பஸ்ஸிலோ வேனிலோ அடைந்து ஒரே நாளில் கடமையாக இருபது முப்பது இடங்களை பார்ப்பது என்பதல்ல…

பயணத்தில் ஒவ்வொரு நாளையும் ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும் நிதானமாக அனுபவித்து ரசித்து மகிழ்வதே. பயணம் என்பது இடங்களை பார்ப்பது மட்டுமல்ல. அந்த இடங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதும் தான்.. அப்பகுதி மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் என பலவற்றை யும் அறிந்து கொள்வது என்பதும் தானே!ஆன்மீகச் சுற்றுலாக்கள் மனநிறைவை தரக்கூடியவை எனில் தொன்மைவாய்ந்த வரலாற்று சுற்றுலாத் தலங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பர்யங்களை அறிந்துகொள்ள ஏதுவானவை. நீர்நிலைகள் சார்ந்த இடங்களுக்கு செல்லும் சுற்றுலாக்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்க வல்லவை. இயற்கைக் காட்சிகள் அதிகம் நிறைந்த சுற்றுலாக்கள் நாம் இந்த பூமியை நேசிக்க தரிசிக்க பாதுகாக்க நம்மை உத்வேகம் கொள்ள வைக்கும்.தற்போது பெருகி வரும் காடு , மலைகள் சார்ந்த சுற்றுலாக்கள் நம்மை நகரப் பரபரப்பிலிருந்து விலக்கி வேறு திசைக்கு அழைத்து செல்பவை. அங்கே உள்ள பல்வேறு அட்வென்சர் ரக விளையாட்டுக்கள் நம்மை புதுப்பித்துக்கொள்ள ஏதுவானவை. பழங்காலக் கோட்டைகள் பழம்பெருமை வாய்ந்த அரண்மனை சார்ந்த சுற்றுலாக்கள் நமது மனிதகுல வரலாறுகளை தொன்மையான பழக்கவழக்கங்களை வாழ்க்கை முறைகளை தெரிந்துகொள்ள ஆர்வங்களை ஏற்படுத்தும்.

சுற்றுலாக்களில் கட்டுப்பாடற்ற காட்டருவி போல கால்போன போக்கில் மனம்போகும் திசையில் பறவைகளை போல சுதந்திரமாக பறந்து செல்ல யாருக்குதான் ஆசை இருக்காது. அதற்கான சந்தர்ப்பங்களும் சூழலும் வாய்த்தால் உடனே கிளம்பிவிடுங்கள் ஒரு மினி சுற்றுலாவிற்கு. உங்களைப் புத்தம் புதிய மனிதராக புதுப்பித்து கொள்ள புத்துணர்ச்சி அடைய. இயற்கை காற்றை உங்கள் சுவாசங்களில் நிரப்பிக் கொள்ள இயற்கையோடு இரண்டறக் கலந்து வெளியேவர உலகை வலம் வாருங்களேன்!சுற்றுலாவின் ஆகசிறந்த அம்சங்களில் ஒன்று அதனைப் புகைப்படமாக ஆவணப்படுத்துவது…தற்போதைய நவீன தொழில்நூட்பம். அதனை நமது உள்ளங்கைகளில் இட்டு நிரப்பி இருக்கிறது. நமது கைப்பேசியின் இட ஒதுக்கீடு அனுமதிக்கும் வரை தாராளமாக புகைப்படங்களை எடுத்துத் தள்ளலாம். சுற்றுலா ஞாபகங்களை நமது நினைவுச் சிறைகளோடு சேர்த்து போனின் நினைவுச் சிறைகளிலும் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.பொதுவான அம்சமாக சுற்றுலாக்களின் இனிய நினைவுகளை நமது ஞாபகபெட்டகங்களில் பொக்கிஷமாய் பொதிந்து கொண்டு மறுபடியும் தேவைப்படும் நேரங்களில் நமது நினைவு அடுக்குகளை கிளறிப் பார்க்க அதே உற்சாகம் ஊற்றெடுக்க அது நம்மை அடுத்த சுற்றுலாவிற்கு ஆயத்தம் செய்ய வைக்கும்.. சுற்றுலாக்கள் இறுகி கிடக்கும் நம் மனங்களை விரிவடைய வைக்கும். பரந்த உலகை வலம் வருகையில் நமது மனமும் பரந்துவிரியத் தொடங்கும். பல்வேறு இனம் மதம் கலாச்சாரம் சார்ந்த மனிதர்களை புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.நம்மை பல்வேறு சூழலுக்கும் காலநிலைக்கும் பருவமாறுபாடுகளுக்கும் மாற்றிக்கொள்ள அதற்கேற்ப வாழ பழக்கப்படுத்தும். நமது குடும்ப உறவுகள் இடையே அன்பு பெருகும், நட்புகள் கூட பலப்படும்.. புதிய நட்புகள் கூட கிடைக்க பெறலாம்.எப்போதுமே வேலை, வீடு என அடைந்துக் கிடக்கும் நம்மை இவ்வகையான சுற்றுலாக்கள் சுலபமாய் மீட்டெடுக்கும். கிளம்புங்கள் ஊரை உலகை உற்சாகமாக வலம் வாருங்கள்!!!! உங்கள் புத்தம் புதிய நபராக உருமாற்றிக் கொள்ளுங்கள்!!!
– தனுஜா ஜெயராமன்

 

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்