மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 964 சிறு வியாபாரிகளுக்கு ரூ.96.30 லட்சம் கடன்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் மழையால் பாதிக்கப்பட்ட 964 சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் ரூ.96.30 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார். கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மிக்ஜாம்’ புயல் மழை காரணமாக பழுதான சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம்’ எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சென்னையில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 4% வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இக்கடனை 50 வாரங்களில் வாரம் ரூ.200 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்குள் 4% வட்டியுடன் திருப்பிச் செலுத்துவது அல்லது மாதம் ரூ.1000 வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சிறப்பு முகாம்கள் கடந்த 5ம் தேதி முதல் சென்னையில் 7 இடங்களில் நடந்தது. அதேபோல, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 இடங்களில் நடந்தது. இதன்மூலம் நேற்று வரை கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோர பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள்,

கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என மொத்தம் 1,771 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  இதில் 964 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.96.30 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் கடன் வழங்கப்படும். ெதாடர்ந்து சிறுவணிகர்கள் வங்கி கிளைகளை அணுகியோ அல்லது உரிய ஆவணங்களை கூட்டுறவு துறை வலைதளத்தில் உள்ள இணையவழி மூலமோ விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்